கல்குவாரிக்கு எதிர்ப்பு.. மீண்டும் வெடித்த போராட்டம் : அன்னூர் சாலையை மறித்து பொதுமக்கள் மறியலால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 December 2022, 5:36 pm

மேட்டுப்பாளையம் அருகே புதியதாக அமைக்கப்பட உள்ள கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கியதை கண்டித்தும் அனுமதியை ரத்து செய்ய கோரி அந்த பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிங்காரம்பாளையம், பெள்ளாதி உள்ளிட்ட ஊராட்சியில் 10க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன,

இந்த கல்குவாரிகளினால் குடியிருப்புகளில் விரிசல், புகை என பல்வேறு சிக்கலினால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஊராட்சி பகுதிகளில் மேலும் 5 குவாரிகள் புதியதாக தொடங்க அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

இதனால்அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் புதியதாக குவாரி தொடங்க அனுமதி அளித்துள்ள அதிகாரிகளை கண்டித்தும் அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் தேரம் பாளையம் என்ற இடத்தில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த காரமடை போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.

இருப்பினும் அதனை ஏற்காத மக்கள் கல்குவாரி களை தொடங்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மேலும் ஏற்கனவே உள்ள குவாரிகள் முறைகேடாக அனுமதியை மீறி குவாரிகள் ஆழமாக தோண்டப்படுவதால் சுற்றுச்சூழல் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுகிறது எனவே அந்த குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

பொதுமக்கள் சாலை மறியலில் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்ய முயன்றதால் போலீசாருக்கும் பொதுமக்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

போலீசார் பெண்களை கைது செய்ய முயன்றதால் கடும் வாக்குவாதமும் ஏற்பட்ட வாகனத்தில் ஏற மறுத்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது இதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் காவல்துறை துனை கண்காணிப்பாளர் பாலாஜி மற்றும் வட்டாட்சியர் மாலதி ஆகியோர் நேரில் வந்து பொதுமக்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதில் கொடுக்கப்பட்ட அனுமதியை கோவை ஆட்சியர் நிறுத்தி வைப்பதாக உறுதி அளித்துள்ளார் எனவே இன்று மாலை கனிமவளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பாதிக்கப்படும் பகுதிகளில் கருத்து கேற்பு கூட்டம் நடத்தப்படும் என கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!