“சுடுகாட்டில் தஞ்சம் புகுந்து சமையல் செய்த பெண்கள்”-நூதன போராட்டத்தால் பரபரப்பு!

Author:
20 June 2024, 4:31 pm

வீட்டை விட்டு வெளியேறி சுடுகாட்டில் தஞ்சம் 50க்கும் மேற்பட்ட பெண்கள் சுடுகாட்டில் பானை வைத்து சமைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா காரக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட சிங்கவனம் வாடிவாசல், காரக்கோட்டை, திருவள்ளுவர் நகர், ஆகிய பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். குறிப்பாக அப்பகுதியில் சுடுகாட்டிற்கு செல்ல சிங்கவனம் பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவர் நிலத்தில் பல ஆண்டுகளாக அப்பகுதி பொதுமக்கள் சுடுகாட்டிற்கு சென்று வர பயன்படுத்தி வந்த நிலையில் அந்த இடத்தை மாவடிகுறிச்சி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் வாங்கி அந்த இடத்தில் வேலி போட்டதாக கூறப்படுகிறது,

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுத்த நிலையில் மணமேல்குடி தாசில்தார் தலைமையில் கடந்த 8:9:2013 அன்று இரு தரப்பினரை பேசி சமரச பேசுவார்த்தை நடத்தி விரைவில் உங்களுக்கு சுடுகாட்டிற்கு சாலை வசதி ஏற்பாடு செய்து தரப்படும் என அதிகாரிகள் கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் இதுவரை அதிகாரிகள் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருந்ததால் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிக்கப் போவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் அறிவித்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மீண்டும் மணமேல்குடி தாசில்தார் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடத்தி பாதை எடுத்து தரப்படும் என உறுதி அளித்ததின் பேரில் தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டனர்.

இந்த நிலையில் தற்பொழுது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் 50-க்கும் மேற்பட்ட பெண்கள், நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள் என அனைவரும் ஒன்று கூடி மயான கரையில் அடுப்பு மூட்டி அதில் சமையல் செய்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த இடத்தில் வீட்டில் உள்ள ஆடு மாடுகளை கட்டி பானை வைத்து சமைத்து வருவதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

சம்பந்தப்பட்ட இடத்திற்கு மணமேல்குடி வட்டாட்சியர் நேரில் சென்று சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார் அதில் இடத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் இருப்பதால் 15-நாட்களில் இடத்தின் உரிமையாளரை வரவழைத்து 10:7.2024,அன்று சமாதான கூட்டம் நடத்தி உரிய பாதை எடுத்து தருவதாக வட்டாட்சியர் உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. விரைவில் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் இதைவிட மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!