இறந்தவர்களுடன் தேநீர் அருந்திய ராகுல் காந்தி? தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்த பதிவு
Author: Prasad13 August 2025, 6:55 pm
கடந்த மக்களவை தேர்தலில் தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்ட சேர்ந்து வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகவும் வாக்காளர் பட்டியலில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் சில நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இவரது குற்றச்சாட்டு பலரின் கவனத்தை குவித்தது.
இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி, ராகுல் காந்தி, எதிர்கட்சி எம்பிக்கள் என பலரும் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை பேரணி நடத்தினர். இதனை தொடர்ந்து ராகுல் காந்தி உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தால் இறந்துப்போனவர்கள் என்று பட்டியலிடப்பட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 7 வாக்காளர்களை இன்று ராகுல் காந்தி சந்தித்து அவர்களுடன் டீ அருந்தினார். இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, “வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான அனுபவங்கள் உள்ளன. ஆனால் இறந்துப்போனவர்களோடு தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்கு ஒரு போதும் கிடைத்ததில்லை. இந்த தனித்துவமான அனுபவத்திற்காக தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
