சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர் : அகற்றும் பணியில் கோவை மாநகராட்சி!!
17 November 2020, 11:49 amகோவை: கோவை மாநகரில் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை லாரிகள் மூலம் உறிஞ்சி அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழையால் கோவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று காலை முதலே மாநகரின் பல்வேறு இடங்களில் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக கோவையில் மேம்பாலங்கள் கீழ் பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாத சாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மழை நீர் வடிகால் அமைப்பை மேம்படுத்தி சிரமத்தை தடுக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், சாலையில் தேங்கியுள்ள நீரை அகற்றும் பணியை கோவை மாநகராட்சி நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.
நீர் உறிஞ்சும் மோட்டார்கள் பொறுத்தப்பட்டுள்ள லாரிகள் மூலம் சாலைகளில் மற்றும் மேம்பாலங்களின் கீழ் தேங்கியுள்ள நீர் அகற்றப்பட்டு வருகிறது.