ரமலான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ; ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்து பரிமாற்றம்!!

Author: Babu Lakshmanan
21 April 2023, 9:34 am

சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ரமலான் பிறை தென்பட்டதையடுத்து தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள ஜாக் (Jaqh) அமைப்புகளை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர்.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானம், திருமங்கலம், தெற்குவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 500க்கும் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

தொழுகை முடிந்து உலக நன்மை வேண்டியும், மழை பொழிய வேண்டியும் உலக அமைதி நிலவ வேண்டும் என்றும் துஆ செய்தனர். இந்த சிறப்பு தொழுகையில் திரைப்பட இயக்குனர் அமீர் கலந்து கொண்டார். தொடர்ந்து, ஒவ்வொருக்கொருவர் வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டனர்.

இதேபோல, கோவையில் ரமலானை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹால் திடலில் இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான ஜாக் கமிட்டி சார்பில் இன்று ரமலான் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.

ஆகவே இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து ரமலான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர். இதில் ஆயிரக்கணக்கானோர் புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

இஸ்லாமியர்களில் பெரும்பான்மை பிரிவான சுன்னத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை சனிக்கிழமை கொண்டாடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!