வருங்கால சந்ததியினர் வாழ ஒரு மரமாவது நடுங்கள்: ஒரு காலுடன் சைக்கிள் விழிப்புணர்வு பிரச்சாரம்..! (வீடியோ)

21 December 2019, 12:24 pm
manikandan-updatenews360
Quick Share

ராமநாதபுரம் :வருங்கால சந்ததியினர் வாழ ஒரு மரமாவது நடுங்கள் என்று ஒரு காலுடன் சைக்கிள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ள மணிகண்டன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராம்நாடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். சுற்று சூழல் காரணமாக காற்று மாசு அடைந்து வருவதால் மரங்களை நட்டு வரும் சந்ததியினர் வாழ வழி செய்யும் வகையில் அனைவரும் ஒரு மரமாவது நட வேண்டும் என வலியுறுத்தி ஒன்றை காலில் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளார்.

கடந்த 13ம் தேதி கன்னியாகுமரியில் துவங்கிய இவரது பிரச்சார பயணம் திருநெல்வேலி, தூத்துக்குடி,விருதுநகர், மதுரை,திருப்பூர், வழியாக வந்த இவர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர் 15 வயதாக இருக்கும்போது விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக தனது வலது காலை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் பலர் ஏளன மாக பேசியதால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒற்றை காலில் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்ததாக தெரிவித்தார்.

2008ம் ஆண்டு சிவகங்கையில் இருந்து சென்னை வரை சுற்று சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி பயணம் மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். இதனையடுத்து 2013ல் ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு பிரச்சார பயணம் செய்ததாக கூறிய அவர் தற்போது மாசு காரணமாக மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டு வருவதாக கூறிய அவர் தலை நகரம் டெல்லியை போல தமிழ்நாடு விரைவில் மாற வாய்ப்பு உள்ளதால் ஒவ்வொருவரும் ஒரு மரமாவது நட்டு சுற்று சூழலை பாதுகாக்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

நாள் ஒன்றுக்கு 60 கி.மீட்டர் தூரம் பயணிப்பதாகவும், நாளை ஈரோடு, சேலம் வழியாக வரும் ஜனவரி ஒன்றாம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் தனது விழிப்புணர்வு பயணத்தை நிறைவு செய்ய உள்ளதாகவும் அங்கு முதல்வர் எடப்பாடி
பழனிச்சாமியை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒவ்வொரு முறையும் பயண செலவுகளை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான தனது தந்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவரது மனைவி ஊக்கமளிப்பதாகவும், தனக்கு ஐந்து மற்றும் ஒரு வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என கூறினர். 1220 கி.மீ தூரம் இந்த பயண தூரம் என தெரிவித்த அவர் தொடர்ந்து அரசு பணிக்கான தேர்வு எழுதி வருவதாகவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர்ந்து விழிப்புணர்வு பயணங்களை மேற்கொள்வேன் என தெரிவித்தார்.