காதல் திருமணம்: இளைஞரை கடத்திச் சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டிய பெண்ணின் உறவினர்கள்

5 July 2021, 11:23 pm
Quick Share

விழுப்புரம்: திருவெண்ணைநல்லூர் அருகே ஆணவ படுகொலைக்கு நிகரான சம்பத்தில் 24 மணி நேரத்தில் 4 குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது கரடிபாக்கம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம். இவர் கடந்த ஓராண்டுக்கு முன்னர் சென்னை தாம்பரம் அருகே உள்ள கிஷ்கிந்தா பகுதியில் உள்ள ஏழுமலை என்பவரிடம் லாரி ஓட்டுநராக பணி செய்து வந்தார். இந்த நிலையில் முதலாளியின் பெண்ணான நந்தினியும் ஆறுமுகமும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 10ம் தேதி (10.06.2021) இருவரும் சென்னையில் இருந்து திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஆணைவாரி கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் இதனை அறிந்த நந்தினியின் பெற்றோர் நந்தினியை காதல் கணவனிடமிருந்து பிரிந்து கடந்த மாதம் 11ம் தேதி (11.06.2021) மீண்டும் சென்னைக்கு அழைத்து சென்று விட்டனர். அங்கு சென்ற நந்தினி கணவனுடன் தான் வாழ்வேன் என கதறி அழுதுள்ளார்.

இதனால் கடந்த மாதம் 27ம் தேதி (27.06.2021) ஆனைவாரியில் உள்ள நந்தினியின் உறவினர் வீட்டில் அவரது பெற்றோர் அவரை விட்டுச் சென்றனர். அங்கு 30ம் தேதி (30.06.2021) வரை மூன்று நாட்கள் உறவினர் வீட்டில் இருந்த நந்தினி, இம்மாதம் 01ம் தேதி (01.07.2021) தமது காதல் கணவன் ஆறுமுகத்திடம் அவரது வீட்டிற்கு கரடிபாக்கம் கிராமத்திற்கு சென்று விட்டார். இதனை அறிந்த நந்தினியின் சித்தப்பா அயன் என்கிற பழனி, மாமா பார்த்திபன் மற்றும் மேலும் இருவர் நேற்று (04.07.2021) நள்ளிரவு 1.30 மணியளவில் கரடிப்பாக்கம் கிராமம் வந்து அங்கிருந்த ஆறுமுகத்தை காரில் தூக்கி சென்று சரமாரியாக அவரது வலது கால் முட்டி, இடது கால் முட்டி மற்றும் தொடை பகுதியில் வெட்டி திருவெண்ணைநல்லூர் அடுத்துள்ள மலட்டாற்றின் கரையோரம் சரமாரியாக வீசிச் சென்றுள்ளனர்.

பின்னர் இதுகுறித்து நந்தினி திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் நேற்று அதிகாலை 4:30 மணி அளவில் தனது கணவனை மீட்குமாறு கெஞ்சியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆறுமுகத்தை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நந்தினி அளித்த புகாரின் பேரில் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிற்கு தகவல் அளிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், விழுப்புரம் துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், திருவெண்ணைநல்லூர் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் மேலும் போலீசார் அடங்கிய ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நந்தினியின் சித்தப்பா அயன் என்கிற பழனியின் செல்போன் நம்பரை ஆய்வு செய்தனர்,

அதில் அந்த எண் சேலம் மாவட்டம் மேலசேரியில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த நந்தினியின் மாமா சித்தப்பா, சசிக்குமார் தினேஷ்குமார் ஆகிய நான்கு பேரையும் பிடித்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நால்வரும் இனைந்து தான் இந்த செயலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து நாலள்வரையும் கைது செய்த போலீசார், ஆளை கடத்தி கத்தியால் வெட்டி கொலை முயற்ச்சி வழக்குகளில் பதிவு செய்து செஞ்சிகிளை சிறையில் அடைத்தனர். ஆணவ படுகொலைக்கு நிகரான இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசாருக்கு நந்தினி நன்றி தெரிவித்தார். மேலும் தற்போது விழுப்புரம் மருத்துவ மனையில் உள்ள ஆறுமுகம் நல்ல நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 143

0

0