ரிதன்யா பிரேத பரிசோதனையில் ஷாக்.. இப்படி ஒரு ரிப்போட்டை பார்த்ததே இல்லை.. நீதிமன்றம் அதிருப்தி..!!

Author: Udayachandran RadhaKrishnan
31 July 2025, 6:57 pm

திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டிபுதூரைச் சேர்ந்த 27 வயது ரிதன்யா, வரதட்சிணை கொடுமை மற்றும் கணவர் கவின்குமாரின் தொடர் துன்புறுத்தல் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில், ரிதன்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைதான மூவரும் திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

ஆனால், அவர்களது மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, மனுதாரர்கள் (ரிதன்யாவின் கணவர் மற்றும் அவரது பெற்றோர்) தரப்பில், “ரிதன்யாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று அவர் கூறியிருந்தார். இரு வீட்டாரும் பொருளாதாரத்தில் சமமாக இருப்பதால் வரதட்சணை தேவையில்லை.

மேலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரிதன்யா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தார்,” என வாதிடப்பட்டது. இதற்கு பதிலளித்த ரிதன்யாவின் தந்தை தரப்பு, “எனது மகளின் தற்கொலை வழக்கில் விரிவான விசாரணை தேவை. ஜாமீன் வழங்கினால், மனுதாரர்கள் சாட்சிகளை கலைத்துவிடுவார்கள். கவின்குமார் மனோதத்துவ ரீதியாக பாதிக்கப்பட்டவர். அவர்களே என் மகளை கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டினர்,” என தெரிவித்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல் குமார், பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்து அதில் போதுமான தகவல்கள் இல்லை என அதிருப்தி தெரிவித்தார்.

“ரிதன்யா உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்படவில்லையே? ரிதன்யாவின் ஆடியோ பதிவு எங்கே? அது அவரது செல்போனில் இருந்து பதிவு செய்யப்பட்டதா?” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு காவல்துறை தரப்பில், “ரிதன்யாவின் செல்போனில் இருந்து ஆடியோ பதிவு செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. ரிதன்யா மற்றும் கவின்குமாரின் செல்போன்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த அறிக்கைகள் 10 நாட்களுக்குள் கிடைக்கும்.

மேலும், ரிதன்யாவுடன் படித்தவர்கள் மற்றும் உறவினர்களிடம் வாக்குமூலம் பெறப்பட வேண்டியுள்ளது,” என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தடயவியல் அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14, 2025-க்கு ஒத்திவைத்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!