இரவினில் திருட்டு, பகலினில் நோட்டம் : ஈரோடு அருகே பலே கொள்ளையன் கைது!!!

28 January 2021, 12:08 pm
Theft Arrest - Updatenews360
Quick Share

ஈரோடு : பகலில் பூட்டியிருக்கும் வீட்டை நோட்டமிட்டு இரவில் கொள்ளையடித்து வந்த பலே கொள்ளையனை காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள் கொண்டு கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த வாரம் டீச்சர்ஸ்காலனி மற்றும் ஈ.பி.பி நகர் பகுதியில் பூட்டியிருந்த வீடுகளை உடைத்து பீரோ மற்றும் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்க மோதிரம், வளையல் மற்றும் செயின் என மொத்தம் 63 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டது.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அவரின் அறிவுறுத்தலின் பேரில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் திருடனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் சம்பத் நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்களை கண்டதும் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளான்.

போலீசார் அவனை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பதும் இவன் மீது கரூர், சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் ஏற்கனவே சிறை சென்று வந்தது தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் சிறையில் இருந்து வெளியே வந்த சுரேஷ் தற்காலிகமாக ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் அறையில் வசித்து வந்ததாகவும் பகல் முழுவதும் பூட்டி இருக்கும் வீடுகளை குறிவைத்து நோட்டமிட்டு இரவில் வீடுபுகுந்து கொள்ளை அடித்து வந்துள்ளான்.

மேலும் போலீசாரின் விசாரணையில் ஈ.பி.பி நகர் மற்றும் டீச்சர்ஸ் காலனியில் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளான். திருடிய நகைகளை நாமக்கல் மற்றும் பள்ளிபாளையம் பகுதியில் விற்றும் அடகு வைத்தும் உல்லாசமாக இருந்து வந்துள்ளான்.

மேலும் நகை விற்ற பணத்தில் கொடுமுடி அருகே வீட்டுமனை வாங்கியதும் தெரியவந்துள்ளது. சுமார் 20லட்சம் மதிப்பிலான 63 சவரன் தங்க நகைகளை தனிப்படை போலீசார் மீட்டு கொள்ளையன் சுரேஷை கைது செய்தனர்.

சிசிடிவி காட்சிகள் உதவியுடன் குற்றவாளியை எளிதில் பிடிக்க முடிந்ததாகவும் எனவே பொதுமக்கள் வீடுகள் மற்றும் தெருக்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என காவல் துறையினர் கேட்டுக்கொண்டனர்.

Views: - 0

0

0