ஃபார்மில் இல்லைதான்.. ஆனால்.. கட் அன்ட் டைட்டாக பேசிய ரோகித் சர்மா!

Author: Hariharasudhan
4 January 2025, 11:31 am

நான் ஓய்வு பெறப் போவதில்லை, அதேநேரம், இந்த முடிவை வெளியில் இருந்து யாரும் எடுத்து விட முடியாது என ரோகித் சர்மா கூறினார்.

சிட்னி: இது தொடர்பாக சிட்னியில் பேட்டியளித்த இந்திய அணி வீரர் ரோகித் சர்மா, “நான் ஃபார்மில் இல்லை, என்னால் ரன்கள் எடுக்க முடியவில்லை. 5வது டெஸ்ட் போட்டி எங்களுக்கு மிக முக்கியமானது. எனவே, நான் கடைசிப் போட்டியில் இருந்து விலக முடிவெடுத்தேன். இது குறித்து பயிற்சியாளர், தேர்வாளரிடம் கூறினேன்.

அவர்கள் என்னுடைய முடிவை ஏற்றுக் கொண்டனர். மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்குப் பிறகே, இந்த சிந்தனை எனது மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அதிகமான ரன்கள் அடித்தும் என்னால் அதைச் செய்ய முடியவில்லை. எனவே, இந்தப் போட்டியில் இருந்து ஒதுங்குவது எனக்கு முக்கியமானது என நான் கருதினேன்.

நான் ஓய்வு முடிவை எடுக்கவிலை. ஓய்வு பெறப் போவதில்லை. கடைசி போட்டியில் இருந்து தான் விலகி உள்ளேன். 5 மாதங்களுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் நிகழ்காலத்தில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன். இந்த தொடரில் நான் ரன்கள் அடிக்காததால், 5 மாதங்களுக்குப் பிறகும் நான் இப்படியே ரன்கள் அடிக்காமல் இருப்பேன் என்பதைச் சொல்ல முடியாது.

Rohit sharma about his retirement plan

ஏனென்றால், ஒவ்வொரு நாளும் வாழ்க்கை என்பது மாறுகிறது. நான் என்னை நம்புகிறேன். நான் யதார்த்தமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நான் நீண்ட காலம் விளையாடி வருகின்றேன். நான் எப்போது ஓய்வு பெற வேண்டும் அல்லது வெளியே உட்கார வேண்டும் அல்லது அணியை வழிநடத்த வேண்டும் என்பதை வெளியில் இருந்து எவரும் முடிவு செய்ய முடியாது.

இதையும் படிங்க: புத்தாண்டில் முதல் முறையாக குறைந்த தங்கம் விலை!

நான் விவேகமானவன், முதிர்ச்சி அடைந்தவன். 2 குழந்தைகளுக்கு நான் தந்தை. வாழ்க்கையில் எனக்கு என்ன வேண்டும் என்று எனக்குத் தெரியும்” எனக் கூறினார். முன்னதாக, ரோகித் சர்மா ஃபார்மில் இல்லை என்றும், அவரால் 50 ரன்களுக்கு உள்ளாகவே அடிக்க முடிந்துள்ளது என்றும் விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!