இரட்டிப்பு பணம் என ஆசையை காட்டி ரூ.10 கோடி மோசடி : பிரபல தங்கம் மற்றும் வைர நகை வியாபாரி கைது!!

By: Udayachandran
13 October 2020, 5:19 pm
FRraud Arrest - Updatenews360
Quick Share

கோவை : ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் 10 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த தங்கம் மற்றும் வைர நகை வியாபாரியை காவல் துறையினர் கைது செய்தனர்.

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் செரின். 38 வயதான இவர் மும்பையில் தங்கம் மற்றும் வைர நகை வியாபாரம் செய்து வந்தார். மேலும் வின் வெல்த் இண்டர்நேசனல் என்ற பெயரில், கோவை சரவணம்பட்டி பகுதியில் பிரோ ஜோன் வணிக வளாகத்தில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்தி வந்தார்.

அந்நிறுவனத்தில் 20 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் வாரந்தோறும் ஆயிரத்து 600 ரூபாய் வீதம் 25 வாரங்களுக்கு 40 ஆயிரமாக பணம் தரப்படும் என விளம்பரப்படுத்தியுள்ளார். மேலும் முதலீடு செய்யும் பணத்திற்கு ஏற்ப இரட்டிப்பாக பணம் தரப்படும் எனவும், தங்கம் மற்றும் வைர நகைகள் வழங்கப்படும் எனவும் செரின் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இலட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்துள்ளனர். முதலீட்டாளர்களுக்கு சில வாரங்கள் முறையாக பணம் தந்த செரின், பின்னர் பணம் தராமல் இழுத்தடித்துள்ளார். இதுதொடர்பாக கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த சேவியர் என்பவர் ஒன்றரை இலட்ச ரூபாய் மோசடி செய்ததாக கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவில் கடந்த டிசம்பர் மாதம் புகார் அளித்தார்.

இதன்பேரில் செரின் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், செரின் தலைமறைவனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக – கேரள எல்லைப்பகுதியான வாளையார் பகுதியில் செரினை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

செரினிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் 10 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததும், மோசடி செய்த பணத்தில் திருச்சூரில் வீடு, வணிகவளாகம், கார் உள்ளிட்டவை வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.

செரினின் மனைவி ரம்யா மற்றும் அந்நிறுவன ஊழியர்கள் சைனேஷ், ராய், பைஜூ மோன் ஆகிய 4 பேர் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 44

0

0