கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிட்டு ரூ.50 கோடி மோசடி : தனியார் நிதி நிறுவன உரிமையாளர் அதிரடி கைது!!

8 November 2020, 1:43 pm
Fraud Arrest - Updatenews360
Quick Share

கோவை : அதிக வட்டி தருவதாக கவர்ச்சிகரமான அறிவிப்பு செய்து நிதி நிறுவனம் நடத்தி ரூ 50 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பீளமேடு சின்னசாமி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் ரிதுவர்ணன் (வயது 37). இவர் தனது நண்பர்களான ஸ்ரீ ஹரி மற்றும் பாலமுருகன் ஆகியோருடன் இணைந்து கடந்த மார்ச் மாதம் முதல் அதே பகுதியில் சர்வா ஐடெக் சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்தார்.

இந்த நிலையில் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் நாளொன்றுக்கு 2.5 சதவீத வட்டி தருவதாக கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தார். இந்த அறிவிப்பை நம்பி சிலர் இவரது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆரம்ப காலகட்டத்தில் ரிதுவர்ணன் முதலீட்டாளர்கள் சிலருக்கு தனது வாக்குறுதியை பின்பற்றி பணம் வழங்கியுள்ளார்.

மேலும் முதலீட்டாளர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களை முதலீடு செய்ய வைத்தால் அதற்கு எம்.எல்‌.எம் பாணியில் உரிய கமிஷன் தொகை வழங்குவதாக அறிவித்தார். இந்த நிலையில் வட்டி மற்றும் இரட்டிப்பு பணம் பெற்ற முதலீட்டாளர்கள் மூலம் பெண்கள் முதியவர்கள் என பலர் கோடிக்கணக்கில் பணம் செலுத்தி உள்ளனர்.

ஒரு கட்டத்தில் நிதி நிறுவனத்தில் இருந்து முதலீட்டாளர்களுக்கு வட்டி சரிவர கிடைக்காததால் அலுவலகத்தை அணுகி கேட்டபோது, ரிதுவர்ணன் கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி பணம் தருவதை இழுத்தடித்து வந்துள்ளார்.

ரிதுவர்ணனின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த முதலீட்டாளர்கள் சிலர் முதலீட்டுத் தொகையை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர். இந்த நிலையில் பிரச்சனை செய்யும் நபர்கள் சிலருக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் வரை முதலீட்டுத் தொகையை ரிதுவர்ணன் திருப்பிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மற்றவர்களுக்கு பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் முதலீட்டாளர்களின் தொந்தரவு காரணமாக தனது செல்போனை அணைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து, கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ரிதுவர்ணன் சுமார் 500க்கும் மேற்பட்டவர்களிடம் 50 கோடி ரூபாய் அளவுக்கு தெரியவந்தது.

இதனையடுத்து ரிதுவர்ணனை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் நிதி நிறுவனத்தில் இயக்குனர்களாக செயல்பட்டு வந்த ஸ்ரீ ஹரி மற்றும் பாலமுருகன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Views: - 25

0

0