அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடம்?: வதந்திகளை நம்ப வேண்டாம்….அதிமுக ட்வீட்..!!

20 July 2021, 10:50 am
Quick Share

சென்னை: அதிமுக அவைதலைவர் மதுசூதனனின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம் என்று அதிமுக தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அவைத்தலைவருமான மதுசூதனன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதன்பின்னர் வயது முதிர்வு காரணமாக அவர் அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கினார்.

Admk - Updatenews360

இதனையடுத்து, சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்தார். இருப்பினும், அவ்வப்போது அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் மதுசூதனன் உடல்நிலை திடீரென மோசம் அடைந்தது. இதையடுத்து அவர், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் மதுசூதனனின் உடலில் பல உறுப்புகள் செயலிழந்து இருப்பது தெரியவந்தது.

தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் மருத்துவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக அவைதலைவர் மதுசூதனனின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம் என்று அதிமுக கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில், கழக அவைதலைவர் திரு. மதுசூதனன் அவர்களின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம், தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் என்று பதிவிட்டுள்ளது.

Views: - 99

0

0