ரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மருத்துவ மாணவர்களின் உடல் இந்தியா கொண்டுவர நடவடிக்கை..! முதலமைச்சர் பழனிசாமி தகவல்
10 August 2020, 11:37 amரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழக மருத்துவ மாணவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஓல்கொகார்ட் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் சென்னையை சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆஷிக், திட்டக்குடியை சேர்ந்த ராமு விக்னேஷ், மற்றும் மனோஜ் ஆனந்த் ஆகிய 4 பேரும் மருத்துவம் படித்து வந்துள்ளனர். மருத்துவ விடுதியில் தங்கி இருந்த இவர்கள், பிற மாணவர்களுடன் சேர்ந்து, அங்குள்ள வோல்கா நதிக்கு குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது, மாணவர்களில் ஒருவர் தண்ணீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டுள்ளார். இதை பார்த்த ஸ்டீபன் என்பவர் அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால், விபத்தில் ஸ்டீபனும் சிக்கி கொள்ளவே, மேலும் இரண்டு மாணவர்கள் அவர்களை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். இதில் ஸ்டீபன் உள்ளிட்ட நான்கு மாணவர்களும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் உடலை மீட்ட அந்நாட்டு காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள முதலமைச்சர் பழனிசாமி, உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்கள் 4 பேரின் உடலையும் இந்தியா கொண்டுவர வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.