கடந்த காலத்தை போல் கட்டுமானங்கள் செய்தால் பேராபத்தை சந்திப்போம் : ரியல் எஸ்டேட் மாநாட்டில் சத்குரு பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
20 March 2023, 1:39 pm

“குறைந்த நிலப்பரப்பும், அதிகப்படியான மக்கள் தொகையும் கொண்ட நம் நாட்டில் கடந்த காலங்களை போல் கட்டுமானங்கள் செய்தால் நாம் பேராபத்தை சந்திப்போம்” என கோவையில் நடைபெற்ற ரியல் எஸ்டேட் மாநாட்டில் சத்குரு கூறினார்.

“நர்விகேட் 2023” என்ற பெயரில் ரியல் எஸ்டேட் கட்டுமானம் தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி கோவை பி.எஸ்.ஜி கன்வென்சன் சென்டரில் நேற்று (மார்ச் 18) தொடங்கியது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சத்குரு அவர்கள் நிகழ்ச்சியில் பேசியதாவது, “உலக நிலப்பரப்பில் வெறும் 4% மட்டுமே நம்மிடம் உள்ளது. ஆனால் உலக மக்கள் தொகையில் 17 % பேர் நம் தேசத்தில் உள்ளனர். இந்த எண்ணிக்கை அடுத்த 15 ஆண்டுகளில் 20% ஆக உயர வாய்ப்புள்ளது. ஆனால், அந்த கூடுதல் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் நிலம் நம்மிடம் இல்லை. இருக்கும் 4 சதவீத நிலப்பரப்பை நாம் புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும். கடந்த காலத்தில் அரண்மனைகள் கட்டியது போன்ற அணுகுமுறையை இப்போது கையாண்டால் நாம் பெரும் பேரழிவை சந்திக்க நேரிடும்.

நீங்கள் அனைவரும் தனி நபராக செழித்திருக்க வேண்டும் என்றால், மொத்த தொழிற்துறையும் செழிப்புடன் இருக்க வேண்டும். தொழிற்துறை செழிப்புடன் இல்லாத வரையில், நீங்கள் வளமுடன் இருக்க முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

மேலும், இளைஞர்களுக்கு தொழில் திறன் மேம்பாடு அழிப்பதன் அவசியம் குறித்து பேசுகையில் “தேசம் என்பது வெறும் கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் சாலைகளால் கட்டமைக்கப்படுவதில்லை. சிறந்த மனிதர்களை உருவாக்குவதன் மூலமே சிறந்த தேசம் உருவாகிறது. உடல்ரீதியாக, மனரீதியாக, திறன் ரீதியாக ஆகச்சிறந்த மனிதர்களை உருவாக்கிற போது மகத்தான தேசம் உருவாகும்.

நம்முடைய தேசத்தில் 15, 16 வயதை அடையக்கூடிய குழந்தைகள், குறைந்தபட்சம் 8 – 10 மில்லியன் வரை தற்போது இருப்பார்கள். அவர்கள் கல்வியறிவு உடையவர்கள் என நினைத்து கொள்கிறார்கள். ஆனால் அவர்களால் இரண்டையும் இரண்டையும் கூட கூட்ட முடிவதில்லை. மேலும், அவர்களிடம் எந்த விதமான தொழில் திறனோ அல்லது போதிய கல்வியறிவோ இல்லை. இத்தகைய திறமையற்றவர்கள் வேலைவாய்ப்பு வழங்குவதும் சாத்தியமில்லை. இந்த நிலையானது வெடிக்க தயாராக இருக்கும் அணுகுண்டை போன்றது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களால் நாட்டில் குற்றவியல் மற்றும் இதர எதிர்மறை செயல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது தேசத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நாட்டில் அதிகப்படியான திறன் மேம்பாட்டு மையங்களை உருவாக்கி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.” என்றார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?