அதிர்ந்து போன சேலம் அதிமுக : 12 வருடங்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி எடுத்த அதிரடி முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 April 2022, 11:13 pm
EPS - Updatenews360
Quick Share

கடந்த 1974ஆம் ஆண்டு அதிமுகவில் அடியெடுத்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி, சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தின், கிளை செயலாளர் பொறுப்பை வகித்தார்.

பின்னர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சேவல் அணியின் மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை, அதிமுகவின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டச் செயலாளராக பதவி வகித்தார்.

அதன் பின்னர், அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர், அமைப்புச் செயலாளர், தலைமை நிலைய செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி வகித்தார்.

கடந்த 2011ம் ஆண்டு முதல், மீண்டும் சேலம் மாவட்டத்தின் புறநகர் மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அதிமுகவில் நடைபெற்ற உட்கட்சித் தேர்தலில் மீண்டும் மாவட்டச் செயலாளராக போட்டியிட விருப்ப மனுவை எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

எதிர்பாரத விதமாக அவரின் நெருங்கிய நண்பரான இளங்கோவனை அந்த மாவட்டத்திற்கு செயலாளராக அதிமுக தலைமை தற்போது அறிவித்துள்ளது.

இதன் மூலம் கடந்த 12 ஆண்டுகளாக வகித்து வந்த சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி துறந்துள்ளார்.

தற்போது கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர், எதிர்கட்சித் தலைவர் என்ற முக்கியமான பொறுப்புகளில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர் பொறுப்பையும் வகிப்பது சரியல்ல என்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனையை ஏற்றே, தன்னுடைய மாவட்டச் செயலாளர் பதவி துறந்துள்ளார் என அதிமுகவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவில் மொத்தம் 17 ஆண்டுகள் மாவட்டச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பு வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 800

0

0