மணல் குவாரிகளை மீண்டும் இயக்குவது குறித்து விரைவில் அறிவிப்பு : அமைச்சர் துரைமுருகன் தகவல்…!!

Author: Babu Lakshmanan
4 January 2022, 6:34 pm
Quick Share

வேலூர் : தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூரில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர் பேருந்து நிலையம் திட்டமிடாமல் கட்டப்பட்டு வருகிறது. பேருந்து நிலையம் அமைக்கப்படும் போது தனியார் நிலங்கள் மற்றும் இடங்கள் பாதிக்கப்படும் என்பதற்காக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்படும் பேருந்துநிலையம் சரியான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வேலூர் பேருந்து நிலையம், சரியான முறையிலும், தான் சொன்னபடி வரும் 15 நாட்களுக்குள் சரியான திட்டமிடுதலின்படி செய்யாவிட்டால், புதிய பேருந்து நிலையம் கட்ட தொடங்கிய காலத்திலிருந்து இதுநாள்வரை நடைபெற்றுள்ள பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக முதலமைச்சரிடம் தெரிவித்து, சிபிசிஐடி விசாரணை நடத்த ஆலோசனை செய்து வருகிறேன். அப்படி நடத்தும் போது இந்த திட்டத்தில் முறைகேடு செய்தவர்கள் சிக்குவார்கள், எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் மணல் குவாரி திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமா…? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது ;- விரைவில் மணல் குவாரிகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்படும். கனிம வளங்கள் வெளிமாநிலங்களுக்கு எடுத்து செல்ல கூடாது என எந்த ஒரு சட்டமும் இல்லை.

கடந்த ஆட்சி காலத்தில் தான் கனிமவளங்கள் பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. கனிம வளங்கள் வெளிமாநிலங்களுக்கு எடுத்து செல்லப்படுவதை தடுக்க தற்போது பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் மற்றும் சாலைகளை சரி செய்ய வேண்டும்.

காட்பாடி தொகுதியில் புதிதாக மருத்துவமனை மற்றும் கல்லூரிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதால் தமிழக முதலமைச்சர் அதை துவக்கி வைக்க வரும்போது காட்பாடியில் கட்டப்பட்டுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கம் திறந்து வைப்பார். வேலூர் மாநகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருப்பதால் அதனை சரிசெய்ய பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது, எனக் கூறினார்.

Views: - 1177

0

0