உடம்புல உசுரு இருக்காது பாத்துக்கோ.. மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலுவலர்களை தாக்கி மிரட்டல்

21 August 2020, 9:49 pm
Quick Share

நாகப்பட்டினம்: நாகை அருகே மணல் கடத்தி வந்ததை தடுத்த கிராம நிர்வாக அலுவலர்களை சரமாரியாக தாக்கி, ஊருக்குள் நடமாட முடியாது என ஒரு கும்பல் மிரட்டும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த கருவேலங்கடை கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் அருள்அரவிந்தன் மகாதானம் கிராமத்தின் பொறுப்பு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மகா தானம் பகுதியில் உள்ள வயல் வெளியில் ஜேசிபி இயந்திரம் கொண்டு சட்ட விரோதமாக அளவுக்கு அதிகமாக மணல் திருடுவதாக கிராம நிர்வாக அலுவலர் அருள் அரவிந்தனுக்கு ரகசியம் தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து அருள்அரவிந்தன் சம்பவ இடத்திற்கு சென்று நடத்திய விசாரணையில்,

கலசம்பாடி பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரது செங்கல் சூலைக்கு மணல் கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது. பின்னர் மணல் ஏற்றி வந்த டிராக்டரை மறைந்திருந்து வி.ஏ.ஓ அருள் அரவிந்தன் மடக்கி பிடித்து நாகை வட்டாட்சியருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் வட்டாட்சியர் இரண்டு வி.ஏ.ஓ – களை உதவிக்கு அழைத்து கொள்ளும்படி கூறுகையில், பாப்பாக்கோவில் வி.ஏ.ஓ சபரிநாதன், செம்பியன் மாதேவி வி.ஏ.ஓ கருப்பசாமி ஆகிய இருவரையும் உதவிக்கு அழைத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரை பறிமுதல் செய்ய முயன்றுள்ளனர்.

அப்போது திடீரென அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் வி.ஏ.ஓ களையும் சரமாரியாக தாக்க தொடங்கினர். அரசு அதிகாரிகள் என்றுகூட பார்க்காமல் அந்த கும்பல் தாக்கும் காட்சிகளை வி.ஏ.ஓ தங்களது செல்போன்களில் மிகுந்த சிரமத்தோடு பதிவு செய்துள்ளனர். செல் போனை பறிக்கும் கும்பலிடம் அடி வாங்கிகொண்டு, வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் அங்கு ஒரே ஒரு எஸ்.ஐ மட்டுமே வந்ததால், அவரால் சமாளிக்க முடியாத காரணத்தால் மர்ம கும்பல் மணல் கடத்தல் டிராக்டரை எடுத்துகொண்டு தப்பித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வேளாங்கண்ணி காவல் ஆய்வாளர் டிராக்டரை பறிமுதல் செய்ததோடு, தப்பியோடிய அடிதடி சம்பவம் குறித்து தாக்குதலுக்கு உள்ளான கிராம நிர்வாக அலுவலர் அருள் அரவிந்தன் வேளாங்கன்னி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதன் பேரில் பாலகிருஷ்ணன், நாகமணி, நவநீதகிருஷ்ணன், சதீஷ்குமார், சுப்பிரமணியன், ராமன் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்