சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு : 4 காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி..!!
1 October 2020, 12:50 pmதூத்துக்குடி : சாத்தான்குளம் தந்தை மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 காவலர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக முதலில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் கொலை வழக்குப்பதிவு செய்து, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 பேரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். கைதாகியிருந்த எஸ்எஸ்ஐ பால்துரை உயிரிழந்த நிலையில், மற்ற 9 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட விசாரணை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வழக்கில் 9 காவலர்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள காவலர் முருகன், தாமஸ், பிரான்சிஸ், முத்து ராஜா ஆகியோர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, 4 காவலர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டார்.