மாணவர்களின் பாலியல் புகார்களை மூடி மறைக்கக் கூடாது : பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கடும் எச்சரிக்கை!!

Author: Babu Lakshmanan
19 November 2021, 6:50 pm
anbil mahesh - updatenews360
Quick Share

திருச்சி : பள்ளிகளில் பாலியல் ரீதியான புகார்கள் வரும் போது, எந்தவொரு காரணத்திற்காகவும் அதனை மூடி மறைக்க முயற்சி செய்யக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சிப் பணிமனையினை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாநில திட்ட இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது :- திருச்சியில் ஆரம்பித்துள்ள இந்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறையை மற்ற மாவட்டங்களுக்கும் எடுத்து செல்ல உள்ளோம். ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என தனித்தனியே பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

பள்ளிகளில் மாணவர்களுக்கு பிரச்சனை என்றால் அதன் மீது நடவடிக்கை எடுக்கும் போது பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது என்பதால் பல பள்ளிகளில் பிரச்சினைகளை விசாரிக்காமல் விட்டு விடுகின்றனர். அது போன்று பள்ளி நிர்வாகம் இருக்க கூடாது,கண்டிப்பாக மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் கூட, பள்ளி நிர்வாகம் குறைந்தபட்சம் அவர்களது பெற்றோர்களையாவது அழைத்து பேசி இருக்கலாம். பள்ளிகளில் பிரச்சினை ஏற்படும் போது பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க முயற்சி செய்ய கூடாது.

மாணவர்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்துள்ளது. ஆனால், அதே நேரம் காழ்புணர்ச்ச்சி காரணமாக யாரும் தண்டிக்கப்பட்டு விடக்காது. எனவே, உண்மை தன்மை ஆராய்ந்து அதன்படி நடவடிக்கை எடுப்போம். குழந்தைகள் மீது பாலியல் சீண்டல்கள் இருக்கும் பட்சத்தில் போக்சோ மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மிக கடுமையான நடவடிக்கைகள் இருக்கும்.

தனியார் பள்ளிகள் பெற்றார்களிடம் வற்புறுத்தி முழுப்பணத்தை வாங்குவதாக புகார்கள் வருகிறது. கண்டிப்பாக இதுபோன்ற புகார்கள் இருக்கும் போது அதன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்போம். தனியார் பள்ளிகள் கட்டணம் கட்டுவதற்கு கட்டாயப்படுத்தக்கூடாது என்று நீதிமன்றமே கூறி உள்ளது. அரசு பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மழை போன்ற பல காரணங்களால் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த சில வாரங்களில் குறைவாக இருந்தது. ஏறத்தாழ 71 லட்சம் மாணவர்கள் இன்று அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர், என தெரிவித்தார்.

மேலும், வேளாண் சட்டங்கள் ரத்து என்கிற அறிவிப்பு குறித்த கேள்விக்கு, மிகப்பெரிய நல்லதொரு அறிவிப்பு என தெரிவித்தார்.

Views: - 390

0

0