பள்ளியில் மாணவன் விஷம் குடித்து தற்கொலை… பள்ளி திறந்த முதல் நாளே காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
1 November 2021, 4:58 pm
student suicide - updatenews360
Quick Share

கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரத்திலுள்ள அரசு பள்ளியில் புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வளர்த்து வந்த மாணவனை முடி வெட்டி விட்டு வருமாறு கண்டித்ததால் எலி பேஸ்ட் சாப்பிட்டு நான் சாகப் போவதாகவும் அதற்கு பள்ளி தலைமை ஆசிரியரும் பள்ளியும் தான் காரணம் என வீடியோ எடுத்து வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி நீதா. இருவரும் கொத்தனார் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு விஷ்வா மற்றும் விஷால் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். விஷால் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், புள்ளிங்கோ ஸ்டைலில் முடியை வளர்த்து கொண்டு பள்ளிக்கு வந்த விஷாலை, முடியை வெட்டிவிட்டு வருமாறு ஆசிரியர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு வந்த விஷாலை முடியை வெட்டி வரவில்லை என கண்டித்து, பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளனர். தன்னுடைய பெற்றோர் ஆலங்குடியில் கட்டிட வேலைக்கு சென்று விட்டதாகவும், நாளை வரும் போது அழைத்து வருவதாக விஷால் ஆசிரியர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், முடி வெட்டாமல் வந்ததற்கு தண்டனையாக வகுப்பு வாசலில் நிற்குமாறு ஆசிரியர்கள் விஷாலை வகுப்பை விட்டு வெளியே அனுப்பி உள்ளனர். மதிய இடைவேளை வரை வகுப்பு வாசலில் விஷால் நின்றுள்ளார். இதனை பார்த்த பள்ளி மாணவர்கள் அவரை கிண்டல் கேலி செய்ததால், விஷாலுக்கு அவமானம் ஏற்பட்டதால், மனவேதனையடைந்தார். இதனால் மதிய உணவு இடைவேளையின் போது வெளியே சென்று எலி பேஸ்ட் வாங்கி வந்த விஷால் வகுப்பறைக்குள் அமர்ந்து அதனை சாப்பிட்டுவிட்டு, மாணவர்களிடம் தான் எலி பேஸ்ட் மருந்தை சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து பள்ளி முடிந்து மாணவர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்றனர். அப்போது விஷாலுடன் படிக்கும் சில மாணவர்கள் விஷால் எலி மருந்தை சாப்பிட்டதை வகுப்பு ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் பள்ளி தலைமையாசிரியர் சம்பத்துடன், விஷால் வீட்டிற்குச் சென்று பள்ளி சீருடையுடன் இருந்த விஷாலை வேறு கலரிலுள்ள சட்டையை அணியவைத்து அழைத்துச் சென்று கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கே விஷாலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரை தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். இதுகுறித்து ஆசிரியர்கள் விஷாலின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து ஆலங்குடியில் கட்டிட வேலையில் இருந்தவர்கள் பதறி அடித்து கொண்டு அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

அங்கிருந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த விஷால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவன் விஷால் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக, தனது செல்போனில் நான் சாகப் போவதாகவும், எனது சாவிற்கு முழுக்க முழுக்க பள்ளி மட்டுமே காரணம் பள்ளி தலைமையாசிரியர் மட்டுமே காரணம், வேறு யாரும் காரணம் அல்ல என வீடியோ எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து திருநீலகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தலைமை ஆசிரியர் சம்பத் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Views: - 500

0

0