10 மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறப்பு : 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் உற்சாகம்

19 January 2021, 10:29 am
School Open - Updatenews360
Quick Share

கோவை : தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகளும் அனைத்தும் மூடப்பட்டன.

தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் பெற்றோரிடம் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பல பெற்றோர்கள் பள்ளிகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை மீண்டும் பெற்றோரிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கலாம் என்று முடிவு எட்டப்பட்டது.

அதன்படி, இன்று முதல் தமிழகத்தில் அனைத்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டுள்ளன.

பள்ளிகள் செயல்பட அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டன. அனைத்து பள்ளிகளும் இதனை கடைபிடித்து வகுப்புகளை நடத்துகின்றன.

பெற்றோரின் ஒப்புகை கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்படுகின்றன. மேலும், பள்ளி வளாகத்திற்குள் நுழையும் போது மாணவர்களுக்கு உடல் வெப்பம் அளவிடப்பட்டு, கைகளுக்கு கிருமி நாசினி கொடுத்த பிறகே வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

பள்ளிகள் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவையைப் பொருத்தவரையில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளி நண்பர்களையும், வகுப்பறைகளையும் பார்த்த உற்சாகத்தில் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Views: - 5

0

0