அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்

28 October 2020, 8:57 pm
Quick Share

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில்  தேசிய விநாயகர் தேவஸ்தானம் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் நீண்டகால குத்தகைக்கு விடப்பட்டது. இந்நிலையில் இந்த இடத்தை ஒத்திக்கு எடுத்தவர்கள் உரிய அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டி கடையை வாடகைக்கு விட்டு இருந்தனர். இதனை தொடர்ந்து உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட கடைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்தது. இதனை தொடர்ந்து கடையை கட்டியவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையை நாடினர். மதுரை உயர் நீதிமன்றம் அவர்களது மனுவை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று அனுமதியின்றி கட்டப்பட்ட கடைகளுக்கு மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜீத் முன்னிலையில் மாநகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர். இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வியாபாரிகள் கூறுகையில்,  இப்பகுதியில் உரிய அனுமதியுடன் தான் கட்டிடங்கள் கட்டப்பட்டு வியாபாரம் நடைபெற்று வந்தது. ஆனால் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் கட்டிடங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறி கட்டிடங்களை மாநகராட்சி நிர்வாகத்தினர் முயன்று வருகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளனர்.