12 ஆண்டுகள்.. இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் : முதலமைச்சரை சந்திக்க முடிவு!
Author: Udayachandran RadhaKrishnan6 May 2025, 2:34 pm
இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன தேர்வர்கள் சார்பில் கடந்த 12 ஆண்டுகளாக நிரப்பப்படாத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்து நிரப்ப கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் தற்போது 13,331 காலி பணியிடங்கள் உள்ள நிலையில் தற்காலிக ஆசிரியர்களாக நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இதையும் படியுங்க: பெட்ரோல் பங்கில் நூதன மோசடி.. 3000 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி தப்பியோடிய வாகன ஓட்டி!
இந்நிலையில் பல வருடங்களாக தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றும் பணி கிடைக்காமல் இருந்து வரும் சூழலில் தமிழக அரசு தற்காலிக ஆசிரியர்களை நியமித்துள்ளதாகவும் அவர்கள் ஒரு புறம் இருந்தாலும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நியமனம் வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன தேர்வர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று இது குறித்தான கோரிக்கைகளை அரசு அலுவலர்களிடம் அளித்து ஆலோசனைக் கூட்டமும் நடத்தி வருகின்றனர். அதன்படி கோவையில் அனைத்து மாவட்டத்திலும் சேர்ந்த நிர்வாகிகள் அவர்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இது குறித்து பேசிய அவர்கள், அனைத்து தேர்வுகளையும் எழுதி தேர்ச்சி பெற்று 12 வருடங்களாக நடைபெறாத தகுதி தேர்வு மற்றும் நியமனத் தேர்வு தற்போது நடைபெற்ற நிலையில் 23 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் ஆனால் 2024ம் ஆண்டு 2768 பேருக்கு மட்டுமே பணி வழங்கப்படும் என்று கூறியிருப்பது 10 சதவிகிதம் மட்டுமே எனவும் இது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் நாங்கள் தொகுப்பூதியத்தில் கூட பணி செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் பகுதி நேர ஆசிரியர்களின் தகுதி என்னவென்று கூட நாங்கள் கேட்கவில்லை ஆனால் நாங்கள் தகுதி தேர்வு நியமன தேர்வு போன்ற தேர்வுகளை எழுதி தேர்ச்சி அடைந்துள்ள நிலையில் தங்களுக்கு பணிகளை வழங்கவில்லை என தெரிவித்தனர்.
எனவே தங்களுக்கு பணிகளை வழங்க வேண்டும் எனவும் மேற்கொண்டு கூடுதல் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
அனைத்து தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்ற நிலையிலும் பல ஆண்டுகளாக வேலை கிடைக்காததால் பலரும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் சிலர் தற்கொலைக்கு முயன்றதாகவும் வேதனை தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக திமுக அரசு அவர்களது தேர்தல் வாக்குறுதியிலும் தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும் வருகின்ற 7ம்தேதி முதலமைச்சர் திருச்சி செல்ல உள்ள நிலையில் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.