இருமாத மின்கட்டணத்தை ரத்து செய்க… மக்களின் பெருஞ்சுமையை குறைக்க தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்..!!!

11 May 2021, 11:15 am
Seeman 01 updatenews360
Quick Share

ஊரடங்கால் முற்றாக வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களின் பெருஞ்சுமையைக் குறைக்க, மின்சாரக் கட்டணத்தை இரண்டுமாத காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கொரோனா தொற்றின் முதல் அலையையொட்டி கடந்த ஆண்டில் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்தே பொதுமக்களும், தொழில்துறையினரும் இன்னும் மீண்டுவர முடியாது சிக்கித்தவிக்கும் நிலையில், தற்போது கொரோனா கொடுந்தொற்றின் இரண்டாம் அலை பரவலை மட்டுப்படுத்தும் நோக்கில் மீண்டும் போடப்பட்டுள்ள முழு ஊரடங்கு காரணமாக ஏழை எளிய நடுத்தர மக்கள் வேலையிழப்பு, வருமானமிழப்பு, தொழில்முடக்கம் போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது.

நாளுக்குநாள் பன்மடங்கு அதிகரித்துவரும் கொரோனா பெருந்தொற்றுச் சூழலில் ஊரடங்கு இன்னும் எத்தனை மாதங்களுக்கு நீட்டிக்கப்படுமோ என்ற அச்சமும் மக்களின் மத்தியில் எழுந்துள்ளது. அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் உண்டு, உயிர்வாழ முடியும் என்ற நிலையிலிருக்கும் தினக்கூலிகள், தெரு வியாபாரிகள் உள்ளிட்ட பாமர மக்கள் உணவு, குடிநீர், மருத்துவச் செலவு முதலிய அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் தவித்து வருகின்ற நிலையில் வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், கடன் தவணை உள்ளிட்ட மாதாந்திர செலவுகள் அவர்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கி பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன.

இப்பேரிடர் காலக்கட்டத்தில் பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான துயர்துடைப்பு உதவிகளை வழங்கும் திட்டங்களைச் செயற்படுத்தி உறுதுணையாக இருக்க வேண்டியது அரசின் தலையாயக் கடமையாகும். ஏற்கனவே அண்டை மாநிலமான கேரளத்தில் மக்கள் படுகின்ற இன்னல்களை உணர்ந்து, குடிநீர் மற்றும் மின்சாரக் கட்டணத்தை இரண்டு மாதங்களுக்கு ரத்து செய்து உத்தரவிட்டு, மக்களின் துயர் துடைப்பதற்கான நடவடிக்கையை கேரள அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, போதிய வருமானமின்றியும் தொழில் முடக்கத்தாலும் வாழ்வாதாரமிழந்து அன்றாடப் பிழைப்பு கூடக் கேள்விக்குறியாகி நிற்கும் ஏழை எளிய நடுத்தர மக்களின் பெருஞ்சுமையில் சிறிதளவைக் குறைக்கும் வகையில், தமிழக அரசு அடுத்து வரும் இரண்டு மாத காலத்திற்கு மின்கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்து உத்தரவிட்டு, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குக் குறைந்தபட்ச ஆறுதலை வழங்கிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 154

0

0