முருகன் கோவிலுக்குள் செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுப்பு! ஆனால் தமிழிசைக்கு அனுமதி? வெடித்த சர்ச்சை…
Author: Prasad7 July 2025, 6:02 pm
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற முருகன் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு நடைபெற்றது. இந்த நிலையில் குடமுழுக்கு முடிவடைந்த பிறகு மூலவர் விமானத்தில் நன்னீராட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் பாஜகவைச் சேர்ந்த தமிழிசைக்கு அனுமதியளித்துள்ளனர்.
ஆனால் அதன் பின் வந்த தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேலே இடமில்லை என கூறி தடுத்து நிறுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் சிறிது நேரத்திற்குப் பிறகு செல்வப்பெருந்தகையை மூலவர் விமானத்தில் ஏற அனுமதி கொடுத்துள்ளனர்.

இதனை குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “திருச்செந்தூரில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. ஆனால் இங்கோ அறநிலையத்துறை அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் செயல்பட்டுள்ளனர். தமிழிசையை அனுமதித்துவிட்டு ஏன் என்னை அனுமதிக்கவில்லை என எனக்கு தெரியவில்லை. 2000 ஆண்டுகளாக இந்த பிரச்சனை இருந்து வருகிறது. ஒரே இரவில் அதனை தீர்த்துவிட முடியாது. மக்களோடு மக்களாக நின்று நாங்கள் தரிசித்து வந்தோம். ஒரு நல்லாட்சிக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காக” என்று கூறினார்.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவராக செயல்பட்டு வரும் செல்வப்பெருந்தகை வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.