கட்சியில் இருந்து விலகும் அதிமுக மூத்த தலைவர்? மனம் விட்டு பேசப் போவதாக அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan2 September 2025, 11:21 am
கடந்த பிப்ரவரி 9ம் தேதி அன்னூரில் நடைபெற்ற அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இபிஎஸ் உடன் மோதல்
இந்த பாராட்டு விழாவில் விழா மேடை உள்ளிட்ட எங்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோர் படங்கள் இடம்பெறவில்லை எனக் கூறி முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.
இதன் மூலம் கே.ஏ. செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிச்சாமி இடையே இருந்த மோதல் நேரடியாக வெளிப்பட்டது. அதிலிருந்து, அதிமுக சார்பில் நடைபெறும் கூட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை கூறுவதை தவிர்த்து வந்தார்,
மத்திய அமைச்சருடன் ரகசிய சந்திப்பு
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ரகசியமாக நிதி அமைச்சர் சீதா ராமனை சந்தித்து ஆலோசனை நடத்துவது, சட்டமன்ற கூட்டத்தொடருக்கு தனி வழியில் செல்வது என தன்னிச்சையாகவே செயல்பட்டு வந்தார்

அதன் பின்னர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு, கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியில் காணப்பட்ட கே.ஏ.செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மேட்டுப்பாளையத்தில் பிரச்சார பயணத்தை தொடங்கியபோது எடப்பாடியிலிருந்து கோபி வழியாகவே மேட்டுப்பாளையம் சென்றார்.
முக்கிய முடிவு
கோபியில் உள்ள வீட்டில் இருந்த கே.ஏ.செங்கோட்டையன், ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் அவருக்கு கோபி எல்லையில் வரவேற்பு கூட அளிக்கவில்லை. இப்படி தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்த நிலையில் கட்சியிலும் செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு மூன்று மாதங்களாக செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு குறைந்து விட்டதாக கூறப்பட்டாலும் கே.ஏ.செங்கோட்டனின் தற்போதைய நிலைப்பாட்டால் அதிமுகவில் மீண்டும் கோஷ்டி பூசல் தலை தூக்க தொடங்கி உள்ளது.
கட்சியில் இருந்து விலகல்?
இந்த நிலையில் இன்று கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன்,

வரும் 5 ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் மனம் திறந்து பேசுவதாகவும், அன்று அனைத்து தகவலும் தெரிவிக்கப்படும் எனவும், கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் காலை 9 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் அன்று அனைத்தும் விவரங்களும் முழுமையாக தெரிவிக்கப்படும்,மனம் திறந்து பேசுகிறேன் பொறுமை காத்துக் கொள்ளுங்கள் என அவர் தெரிவித்தார்.
