நோயாளிகளின் வீடுகளில் தொடர் கொள்ளை : தலைமறைவாக இருந்த செவிலியர் கைது…

Author: kavin kumar
25 February 2022, 4:04 pm

திருச்சி : திருச்சியில் நோயாளிகளின் வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த செவிலியரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், திருவரம்பூர் அடுத்துள்ள பூலாங்குடி காலனியை சேர்ந்தவர் லோகநாதன்(33). இவரின் தாயார் ஜானகி உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் பராமரிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தாயாரின் உடல்நிலையை பரிசோதிக்க உறையூரில் உள்ள ஸ்ரீதாயார் ஹோம் கேரை தொடர்பு கொண்டு லோகநாதன் அழைத்துள்ளார். அங்கு மேலாளராக பணிபுரிந்து வந்த அம்பிகா என்ற பெண் பேசினார். பின்னர் ஸ்ரீ தாயார் ஹோம் கேரில் இருந்து வருவதாக கூறி திருச்சி பெரிய மிளகுபாறை புதுத்தெருவை சேர்ந்த எழிலரசி (31) என்ற செவிலியர், பூலான்குடி காலனியை சேர்ந்த லட்சுமி(47) ஆகிய இருவரும் லோகநாதன் வீட்டிற்கு சென்று ஜனனியின் உடல் நிலையை பரிசோதித்து சென்றனர்.

சிறிது நேரம் கழித்து லோகநாதன் வீட்டில் வைத்திருந்த 3பவுன் தங்க நகை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வீட்டுக்கு வந்து சென்ற இருவரைப் பற்றி லோகநாதன் தெரிவித்தார். இருவரில் லட்சுமி என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் எழிலரசி மற்றும் லட்சுமி ஆகியோர் நகையை திருடியது தெரியவந்தது. தொடர்ந்து லட்சுமியை காவல்துறை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள எழிலரசி தேடி வந்தனர்.

தொடர் விசாரணையில் ஹோம் கேருக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை, நிர்வாகத்திற்கு தொியப்படுத்தாமல் அங்கு மேலாளராக பணிபுரியும் அம்பிகா தங்களிடம் தொியப்படுத்துவதாகவும், சிகிச்சை என்ற பெயரில் செல்லும் வீடுகளில் நகைகளை கொள்ளையிட்டு பங்கிட்டுக் கொள்வதாக தொிவித்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் மேலாளர் அம்பிகாவையும் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த எழிலரசியை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கும் மேலான தேடுதல் வேட்டைக்கு பின்னர் நேற்று எழிலரசி தனிப்படை காவல் துறையிடம் சிக்கினார். எழிலரசியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி பெண்கள் சிறையில் அடைத்துள்ளனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?