‘என்னை கொலைக்காரன் ஆக்கிடாதீங்க’… பிளாஸ்டிக் பொருட்கள் சோதனையின் போது மாநகராட்சி அதிகாரிகளை தாக்கிய கடை ஊழியர்கள்..!!

Author: Babu Lakshmanan
28 September 2022, 8:08 pm

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சோதனை செய்ய சென்ற மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தற்காலிக ஊழியர்களின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் கடைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் உதயா எசென்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் கடை மற்றும் குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக், பிளாஸ்டிக் கிளாஸ் கப், உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, மாநகராட்சி வடக்கு மண்டல உதவி ஆணையர் தனசிங், சுகாதார நகர் நல அலுவலர் டாக்டர் அருண்குமார், சுகாதார அலுவலர் ஹரி கணேஷ் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த கடை உரிமையாளருக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

மாநகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது, மாநகராட்சி தற்காலிக ஊழியர் கணேஷ் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மீது கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்புடன் அந்த கடை மற்றும் குடோனுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து மேல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும், வடபாகம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் சோதனையில் ஈடுபட்ட போது, மாநகராட்சி அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • producer asked 40 lakhs to prajin for shooting 40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…