“பாடும் நிலா“ பாலசுப்பிரமணியம் மறைவு : அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல்!!

25 September 2020, 3:59 pm
condolence - updatenews360
Quick Share

பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 51 நாட்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் இன்று மதியம் 1.04 மணிக்கு காலமானார். அரவது மறைவிக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய இசை அதன் குரல்களில் ஒன்றை இழந்துவிட்டது என கூறினார்.

துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல்

எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இசையுலகில் ஒரு வெற்றிடத்தை விட்டு சென்றுள்ளார். அதனை நிரப்புவது மிகவும் கடினம். அவரது மென்மையான குரல், மொழி மற்றும் இலக்கியம் மீதான அன்பு ஆகியவை என்னை உட்பட லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் அழியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் இருவரும் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்திற்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் . ஓம் சாந்தி.

பிரதமர் மோடி இரங்கல்

எதிர்பாராத விதமாக பின்னணி பாடகர் எஸ்.பி.பி., மறைவு மூலம் நமது கலாசார உலகம் ஏழையாகிவிட்டது. அனைவரின் வீடுகளிலும் ஒலித்த குரல், மென்மையான குரல் மற்றும் இசையால், பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்தது. இந்த சோகமான நேரத்தில், அவரின் குடும்பம் மற்றும் ரசிகர்களின் நினைவாக எனது எண்ணம் உள்ளது. ஓம்சாந்தி.

உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல்

எஸ்.பி.பி. மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார். தனது இனிமையான குரலால் அனைவரின் மனங்களில் நிரந்தரமாக குடியிருப்பார் எஸ்.பி.பி. எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல்

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார். வாழ்நாள் முழுவதும் இசைக்காகவே செலவிட்டனர் எஸ்.பி.பி. 4 மொழிகளில் சிறந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றவர் எஸ்.பி.பி. எஸ்.பி.பி. மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு பெரும் இழப்பு என கூறினார்.

முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது ஈடு இணையற்ற குரல் வல்லமையால் தமிழ் திரைப்பட உலகுக்கும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்தவர் எஸ்.பி.பி. எஸ்.பி.பி.யின் மறைவு திரைத்துறைக்கும், கலை உலகிற்கும், தனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என கூறினார்.

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் இரங்கல்

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர் இத்துயரை தாங்கிக்கொள்ளும் மனவலிமை பெற வேண்டுகிறேன். தேமதுரக் குரல் கொண்டு இவ்வையகத்தை மகிழ்வித்த பாடகர் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயர் அடைந்தேன். எஸ்.பி.பி. மறைந்தாலும் கானக்குரல் கொண்டு அவர் பாடிய பாடல்கள் என்றென்றும் மறையாது ஒலிக்கும் என கூறினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். காலம் அவரை பிரித்தாலும், காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கிறது அவரது தேன்குரல்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இரங்கல்

எஸ்.பி. பாலசுப்ரமணியம் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது பாடல், பல மொழிகளில் லட்சகணக்கானோரின் இதயங்களை தொட்டுள்ளது. அவரது குரல் என்றும் நிலைத்திருக்கும்.

நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

எஸ்.பி.பி.யின் பாடலையும், குரலையும் விட அவரது மனித நேயத்தை அனைவரும் நேசித்தார்கள் என்று மறைந்த இந்திய பின்னணி பாடகர் எஸ்.பி.பி-க்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகம் எத்தனையோ மிகப்பெரிய பாடகர்களை உருவாகியுள்ளது, எத்தனையோ பாடகர்களுக்கு இல்லாத சிறப்பு எஸ்.பி.பி-க்கு உள்ளது, அவருடைய பாட்டுக்கும், குரலுக்கும் ரசிகர்கள் இல்லாதவர்கள் இந்தியாவிலேயே இல்லை என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து இரங்கல்

அரை நூற்றாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தியவர் எஸ்.பி.பி. என எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். பொன்மாலை பொழுது அஸ்தமனமாகிவிட்டது என்று வைரமுத்து கண்ணீருடன் கவிதாஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் சங்கீத ஜாதிமுல்லை வாடிவிட்டது என்றும் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

Views: - 4

0

0