காசி தமிழ் சங்கமத்தை காண கோவையில் இருந்து சிறப்பு ரயில் : பயணிகளை வழியனுப்பி வைத்த பாஜகவினர்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 November 2022, 1:39 pm

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான இரண்டாவது ரயில் கோவையில் இருந்து இன்று காலை கிளம்பியது

காசிக்கும் தமிழகத்திற்குமான ஆன்மீகம் மற்றும் கலாச்சார தொடர்பை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு துவங்கியுள்ள காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான இரண்டாம் கட்ட ரயில் சேவை கோயம்புத்தூரில் இருந்து இன்று அதிகாலை 4.40 மணிக்கு தொடங்கியது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 83 பயணிகள் கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து காசி தமிழ் சங்கமம் ரயிலில் தங்களது பயணத்தை துவங்கினர்.

முதற்கட்ட பயணத்தில் மாணவர்கள் குழுக்களாக பங்கேற்று இருந்த நிலையில், இந்த ரயிலில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் இசை கலைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்லும் பயணிகளை கோயம்புத்தூர் மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், மலர் தூவியும் உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர்.

காசி தமிழ்ச் சங்கமம் ரயில் சேவை கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று அதிகாலை துவங்கப்படுவதையடுத்து ரயில்வே மற்றும் மாநகர காவல்துறையினர் 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த வழியனுப்பு நிகழ்வில் பாஜக மாநில துணை தலைவர் பேராசிரியர் கனகசபாபதி, விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளர் அரசூர் அசோகன் மற்றும் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தமராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!