மாத மாதம் போராடியே ஊதியம் பெற வேண்டிய நிலை : தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் கண்ணீர்!!
Author: Udayachandran RadhaKrishnan18 October 2021, 2:47 pm
அரியலூர் : நகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஊதியம் வழங்காததை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் நகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாத ஊதியத்தை இதுவரை வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நிரந்தர மற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் இன்று திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஒவ்வொரு மாதமும் தங்களது ஊதியத்தை போராடியே பெற வேண்டி உள்ளதாகவும், 18 தேதி ஆகியும் இதுவரை கடந்த மாத சம்பளத்தை வழங்கவில்லை என குற்றம் சாட்டினர்.
மேலும் சுமார் 3 மணிநேரமாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தங்களிடம் எந்தவித அதிகாரிகளும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை எனவும், கடந்த மாத ஊதியம், தீபாவளி அட்வான்ஸ் தொகை மற்றும் சீருடை உள்ளிடவைகளை உடனடியாக வழங்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக சாலை மறியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
0
0