அழகு போனா என்ன இப்போ…திடீர் விபத்தால் செயலிழந்த காதலி: தாயாய் மாறிய காதலன்…!!

21 July 2021, 12:52 pm
Quick Share

கரூர்: கீழே தவறி விழுந்து வாய் பேச முடியாமலும், நடக்க முடியாமலும் போன இளம்பெண்ணை கண்ணும் கருத்துமாய் கவனித்து கொள்ளும் காதலளின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட எஸ்.வெள்ளாளபட்டி இந்திரா காலணியில் வசிப்பவர்கள் 21 வயதான கண்மணி மற்றும் 19 வயதான காயத்ரி. இவர்கள் சிறு வயதாக இருக்கும் போதே தந்தை இவர்களை விட்டு பிரிந்து சென்று விட தாய் மற்றும் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளனர்.

புற்று நோயால் பாதிக்கப்பட்ட தாய் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் இருவரும் பாட்டியின் கூலித் தொழில் வருமானத்தில் வளர்ந்துள்ளனர். கரூர் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.ஸி விலங்கியல் பட்டம் பெற்றுள்ளார் கண்மணி. காயத்ரி அதே கல்லூரியில் பி.எஸ்.ஸி வேதியியல் 2 ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கண்மணி வீட்டிற்கு அருகில் நடந்து சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது இருந்து கண்மணிக்கு வாய் பேச முடியாமலும், நடக்க முடியாமலும் போய் விட்டன. அத்தியாவசிய தேவைக்கு கூட ஒருவரின் உதவியை நாடும் நிலை ஏற்பட்டது. கையால் எதையும் பிடிக்க முடியாமலும், உணவு, தண்ணீர் சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கண்மணி பள்ளி, கல்லூரியில் படிக்கும் போதே அவரது உறவினரான தினேஷ் என்ற இளைஞர் அவரை காதலித்து வந்துள்ளார். கடந்த 6 வருடமாக காதலித்து வரும் இளைஞர் தினேஷ் அவருக்கு உதவியாக இருந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்று சிகிச்சை பார்த்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக போதிய பண வசதி இல்லாததன் காரணமாக மருத்துவம் பார்ப்பதை விட்டு வீட்டிலேயே இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு அவர்களுக்கு உதவியாக இருந்த பாட்டியும் இறந்து விட வருமானத்திற்கு வழி இல்லாமல் கண்மணியின் தங்கை காயத்ரி அருகில் இருக்கும் பெண்களுடன் சேர்ந்து டெக்ஸ்டைல் நிறுவனத்திற்கும், கொசுவலை நிறுவனத்திற்கும் கிடைக்கும் கூலி வேலைக்கு சென்று, கிடைக்கும் வருமானத்தில் உயிர் வாழ்ந்து வருகின்றனர். காதலன் தினேஷ் எம்.எஸ்.ஸி முடித்து விட்டு காவலர் தேர்வு எழுதியுள்ளார்.

அடுத்து உடல் தகுதி தேர்வுக்காக காத்திருக்கிறார். இதற்கிடையில் கொசுவலை நிறுவனத்தில் மூட்டை தூக்கும் வேலைக்கு சென்று கிடைக்கும் கூலியை இவர்களுக்காக கொடுத்து உதவி வருகிறார். கண்மணிக்கு உரிய மருத்துவ வசதி செய்து தர வேண்டும் என அவரது காதலரும், தங்கையும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அழகை இழந்து, உடல் மெலிந்து, அவசிய தேவைகளுக்கு கூட மற்றவரை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்ட காதலியை, கைவிடாமல் கண்ணை போல பாதுகாக்கிறார் உண்மை காதலர் தினேஷ்.

Views: - 137

0

0