முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் உப்புமா, சாம்பாரில் கிடந்த பல்லி : 8 மாணவர்கள் வாந்தி..!
Author: Udayachandran RadhaKrishnan13 August 2025, 2:22 pm
அரசு தொடக்கப்பள்ளியில் இன்று காலை சிற்றுண்டி அருந்திய 5 மாணவியர் மற்றும் 3 மாணவர்கள் என மொத்தம் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, வலங்கைமான் வட்டம், பூனாயிருப்பு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மொத்தம் 14 மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
ஈராசிரியர் பள்ளியான இதில் டேவிட் என்பவர் பொறுப்பு தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இன்று காலை பள்ளியில் அரிசி உப்புமா மற்றும் சாம்பார் சிற்றுண்டியாக வழங்கப்பட்டது.
இதனை அருந்திய 8 மாணவர்களுக்கு திடீர் வாந்தி ஏற்பட்டது இதில் உணவுகளை பரிசோதித்ததில் சாம்பாரில் பல்லி கிடந்தது தெரியவந்தது

இதனை தொடர்ந்து கார்த்திகா, மதுஸ்கா, மகிஷா, ஈஸ்வரமூர்;த்தி, ரோகிணி, தரணிகா, மித்ரன், விஸ்வா ஆகிய 8 பேரும் உடனடியாக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
