இராட்சத குழாயில் திடீரென உடைப்பு.. காசிமேட்டில் குளம் போல தேங்கி நிற்கும் சமையல் எண்ணெய்..!! தொடர்ந்து அலட்சியம் காட்டுகிறதா எண்ணெய் நிறுவனங்கள்..?

Author: Babu Lakshmanan
27 September 2022, 11:24 am

சென்னை காசிமேடு பகுதியில் மீன் பிடி துறைமுகத்தில் பைப் லைன்லில் இருந்து விரிசல் ஏற்பட்டு சமையல் எண்ணெய் குளம் போல் தேங்கி உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பாக காட்சி அளிக்கிறது.

சென்னை துறைமுகத்திலிருந்து திருவெற்றியூர் எண்ணெய் நிறுவனத்திற்கு பூமிக்கு அடியில் ராட்சதக் குழாய்கள் மூலம் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு வழியாக செல்கிறது. இந்நிலையில், இன்று அதிகாலை திடீரென அதில் விரிசல் ஏற்பட்டு சமையல் எண்ணெய் முழுவதுமாக வெளியேறி கப்பல் கட்டும் தளத்தில் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது.

அதிகாலை பணிக்கு வந்த மீனவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து, என்ன செய்வது என திகைத்துப் போயினர். உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த எண்ணெய் நிறுவன அதிகாரிகள், எண்ணெயை உடனடியாக லாரிகள் மூலமாக அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதே போன்ற நிகழ்வு இதே பகுதியில் நடைபெற்றுள்ள நிலையில், பழுதடைந்த பைப் லைன்களை புதியதாக மாற்றி அமைக்காமல் பழைய பைப்லைன் மட்டுமே பயன்படுத்தி வருவதால் இது போன்ற நிகழ்வு நடந்திருப்பதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், மீனவர்களுக்கு நலனில் அக்கறை கொண்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் எண்ணெய் நிறுவனங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதனால் தீ விபத்து அல்லது வேறு ஏதேனும் விபத்துக்கள் நடந்தால் சேதம் மீனவர்களுக்கு தான் என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, எண்ணெய் நிறுவனங்கள் இதை கருத்தில் கொண்டு பணிகளை துரிதப்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இனி இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கப்பல் கட்டும் தளத்தில் சமையல் எண்ணெய் குளம் போல் தேங்கி இருக்கக்கூடிய காட்சி காசிமேடு பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?