நடைபயிற்சியின் போது கேபிள் டிவி உரிமையாளரை கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம் : கைது செய்த 6 பேர் கூறிய பகீர் வாக்குமூலம்!

Author: Udayachandran RadhaKrishnan
8 November 2022, 9:28 pm
6 Arrest - Updatenews360
Quick Share

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறை கைலாஷ் நகர் பகுதியில் நடைப்பயிற்சி சென்ற கேபிள் டிவி உரிமையாளரை வெட்டி படுகொலை செய்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

லால்குடி அருகே நெருஞ்சலக்குடி ஊராட்சி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் 45 வயதான மாதவன். இவர் சொந்தமாக பம்பரன்சுற்றியில் கேபிள் டிவி நடத்தி வருகிறார்.

இவருக்கு மஞ்சுளா தேவி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மஞ்சுளாதேவி லால்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

நெருஞ்சலக்குடி ஊராட்சியில் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 7 1/2 சென்ட் இடம் உள்ளது. கோவில் கமிட்டியின் பொருளாளராக மாதவன் பதவி வகித்து வருகிறார். இந்த இடத்தை அதே பகுதியைச் 54 வயதான மதி ஆக்கிரமித்துள்ளார்.

கோயில் இடத்தின் ஆக்கிரமிப்பை அளவீடு செய்து வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் விசாரணை நடந்து வந்துள்ளது. இந்நிலையில் 7 ந்தேதி அதிகாலை நடை பயிற்சி சென்றவர் மாதவனை அடையாளம் தெரிய மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர்.

இந்த கொலைக்கான காரணம் கோயில் இடத்தை ஆக்கிரமித்த நபர்களால் நடந்திருக்கலாம் என போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலை குறித்து லால்குடி டிஎஸ்பி சீதாராமன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்து கொலையை அரங்கேற்றிய லால்குடி அருகே நெருஞ்சலக்குடியைச் சேர்ந்த 54 வயதான மதி, நெய்குப்பை மாதா கோவில் தெருவைச் சேர்ந்த 24 வயதான அலெக்ஸ் சுப்பிரமணியன், மண்ணச்சநல்லூர் அருகே கல்பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்த 37 வயதான ஸ்டீபன் ஆரோக்கியராஜ், மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியைச் சேர்ந்த 24 வயதான மணிகண்டன், நாமக்கல் மாவட்டம் செம்பேடு பகுதியைச் சேர்ந்த 27 வயதான சிவா உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 310

0

0