எலிக்கு பயந்து வீட்டை எரித்த கதை : யானைகளை விரட்ட வீசப்பட்ட பட்டாசால் எரிந்து போன கரும்புத் தோட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 August 2021, 11:30 am
Sugar Cane Farm Burned - Updatenews360
Quick Share

கோவை : கோவை அருகே கரும்பு தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்ட வீசப்பட்ட பட்டாசு நெருப்பு பட்டு கரும்பு தோட்டத்தில் தீவிபத்து ஏற்பட்டது.

கோவை மாவட்டம் ஆலந்துறையை அடுத்த சப்பானி மடை பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் நேற்று நள்ளிரவு இரண்டு காட்டு யானைகள் புகுந்தன. இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற வனத்துறையினர் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன் ஒருபகுதியாக பட்டாசுக்களை வீசி யானைகளை விரட்டும் முயற்சியும் நடைபெற்றது. அப்போது கரும்புக் தோட்டத்தில் காய்ந்த சோகைகள் இருந்ததால் பட்டாசு வெடித்ததில் கரும்புத் தோட்டத்தில் தீப்பிடித்தது.

இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் தீ மளமளவென தோட்டம் முழுவதும் பரவியது. இதனால் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் தீக்கிரையாகி வீணானது.

தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். யானையை விரட்ட பட்டாசு வீசி, தோட்டத்தையே பறிகொடுத்த விவசாயிகள் கடும் வேதனையடைந்துள்ளனர்.

Views: - 276

0

0