கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட சடலம்.. சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்ட சூலூர் இன்ஸ்பெக்டர்!
Author: Udayachandran RadhaKrishnan11 August 2025, 12:52 pm
கொலை வழக்கை சரியாக விசாரணை மேற்கொள்ளாததால் சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் பணி இடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி நடவடிக்கை எடுத்தார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரை சென்னையில் கொலை செய்து காரில் கொண்டு வந்து மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் கல்லை கட்டி போட்டனர்.
விசாரணையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதை அடுத்து அவருடைய உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.
அந்த உடல் எலும்புக் கூடாக காணப்பட்டது.
இந்தக் கொலையை செய்ததாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த பாலமுருகன், முருகப்பெருமாள் ஆகியோர் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். அதன் பின்னர் தான் கொலை விவகாரம் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது.
சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் செட்டிபாளையம் காவல் நிலையை ஆய்வாளராக பொறுப்பையும் கவனித்து வந்தார். இந்த கொலை வழக்கில் முருகப்பெருமாள் சரண் அடைந்தாலும், அவருக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என்று தெரிகிறது.

இந்த கொலையை பாளையங்கோட்டையைச் சேர்ந்த நியூட்டன், பெனிட்டோ ஆகியோர் செய்து உள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. உடனே அந்த இரண்டு பேரையும் கைது செய்யப்பட்டனர்.
கொலை வழக்கில் தொடர்பு இல்லாத முருகப்பெருமாள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தாமல் அவரையும் வழக்கில் சேர்த்து கைது செய்த விவகாரம் உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.
இது குறித்து டி.ஐ.ஜி சசி மோகன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் முருகப்பெருமான் குறித்து காவல் ஆய்வாளர் லெனின் சரியாக விசாரணை நடத்தவில்லை என்பது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி சசிமோகன் உத்தரவிட்டார். கொலை வழக்கு சரியாக விசாரிக்காத ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
