எதற்கும் துணிந்தவன் படக்காட்சி திடீர் ரத்து : தியேட்டர் முன் பா.ம.கவினர் ரகளை.. எதிர்ப்பு தெரிவித்த சூர்யா ரசிகர்கள்.. பதற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 March 2022, 2:32 pm
Surya Movie Cancel -Updatenews360
Quick Share

விழுப்புரம் : நடிகர் சூர்யா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் திரைப்படத்தை தியேட்டர் நிர்வாகம் ரத்து செய்தது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சரவணா தியேட்டரில் இன்று வெளியிடப்பட இருந்த நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை திரையிடக் கூடாது என பாமக செஞ்சி நகர செயலாளர் சின்னத்தம்பி தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் திரையரங்க நிர்வாகத்திடம் நேற்று மனு அளித்திருந்தனர்.

அந்த மனுவில் நடிகர் சூர்யா இயக்கி நடித்த ஜெய்பீம் திரைப்படம் சமூக வலை தளத்தில் வெளியிடப்பட்டது. அதில் வன்னியர்களின் அடையாளமாக அக்னி கலசத்தை தவறாக சித்தரித்து படம் வெளியிட்டதாக கூறி அப்பொழுது பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் ஞானவேல் மன்னிப்பு கோரி சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிய நிலையில் நடிகர் சூர்யா இது தொடர்பாக மன்னிப்பு கேட்கவில்லை எனவும் எனவே இன்று வெளியாக உள்ள நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை திரையிடக் கூடாது என கூறி மனு அளித்திருந்தனர்.

இதையடுத்து செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் செஞ்சி சரவணா திரையரங்கம் முன்பு இன்று காலை முதலே பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அப்போது அங்கு வந்த சூர்யா ரசிகர்கள் காலை 11.30 மணிக்கு முதல் காட்சி தொடங்கி இருந்த நிலையில் திரையரங்கு முன்பு பேனர்களை ஒட்டி திரைப்படத்தை வரவேற்க ஆர்வமுடன் இருந்தனர்.

அப்போது அங்கு வந்த தியேட்டர் நிர்வாகமும், காவல் துறையினரும் ரசிகர்களிடம் எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிடவில்லை என தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சூர்யா ரசிகர் தியேட்டர் நிர்வாகத்தினரிடமும் காவல்துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ரசிகரை சமாதானம் செய்த போலீசார் அவரை அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில் 20க்கும் மேற்பட்ட பாமகவினர் தியேட்டர் முன்பு குவிந்தனர். அப்போது அவர்களிடம் திரைப்படம் வெளியிடவில்லை என காவல்துறையினர் தெரிவித்தால் அவர்கள் கலைந்து சென்றனர்.

செஞ்சி சரவணா திரையரங்கம் முன்பு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு ரசிகர்கள் மற்றும் பாமகவினர் என அடுத்தடுத்து தியேட்டர் முன்பு குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்புடன் காணப்பட்டது.

Views: - 449

0

0