தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க தமிழக அரசு தடை

Author: kavin kumar
30 October 2021, 10:14 pm
Quick Share

உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரியும், பட்டாசு வெடிக்கும் கால அளவை அதிகரிக்க கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், பட்டாசு வழக்கில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், தனி நபரின் மகிழ்ச்சிக்காக முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட பிறரின் உடல் நலத்தையும், உயிரையும் பாதிக்கும் பட்டாசுகளை அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதே சமயம் ‘பேரியம் நைட்ரேட்’ ரசாயனம் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கும், சரவெடி பட்டாசுகளுக்கும் ஏற்கனவே உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பட்டாசு வெடிப்பதை முழுமையாக தடை செய்யவில்லை என்றும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவித்தனர். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பொதுமக்கள் வெடிக்க தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- உச்ச நீதிமன்றம் தனது 29.10.2021 ஆம் தேதியிட்ட தீர்ப்பில், 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் பல்வேறு வழக்குளில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலும், அதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மீண்டும் வலியுறுத்தி,

எதிர்வரும் தீபாவளி பண்டிகை மற்றும் பிற நிகழ்வுகளின் போது, சாதாரண வகையிலான பட்டாசுகளின் பயன்பாட்டிற்கு எந்தவிதமான தடையும் இல்லை.ஆனால், பொதுமக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பேரியம் ரசாயனம் கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ விற்பனை செய்யவோ அல்லது வெடிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வெடித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Views: - 269

0

0