அகில பாரத இந்து மகா சபை மாநில செயலாளர் படுகொலை

22 November 2020, 11:06 pm
Quick Share

கிருஷ்ணகிரி: அகில பாரத இந்து மகா சபை மாநில செயலாளர் நாகராஜ் படுகொலைக்கு போலீசாரின் அலட்சியப் போக்கே காரணம் என்று அகில பாரத இந்து மகா சபை மாநில தலைவர் பாலசுப்பிரமணி குற்றச்சாட்டியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலூர் சாலையில் உள்ள சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (52). இவர், அகில பாரத இந்து மகா சபையின் மாநில செயலாளராக இருந்து வந்தார். மேலும், வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்யும் தொழிலும் செய்து வந்தார். இந்நிலையில் இன்று 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் நாகராஜ், ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார் . இவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு, அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்பிரமணி அஞ்சலி செலுத்தினார்.இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ” இந்து மகாசபை மாநில நிர்வாகி நாகராஜ் படுகொலைக்கு போலீசாரின் அலட்சியமே காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும் கடந்த ஆறு மாதமாக தனக்கு விடுக்கப்படும் கொலை மிரட்டல் குறித்த அனைத்து விவரங்களையும், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தமிழக முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு மனு மூலம் நாகராஜ் தெரிவித்திருந்தார்.

பலமுறை மனு அளித்தும் தமிழக அரசோ, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையோ நாகராஜன் மனுவிற்கு செவிசாய்த்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவே இன்று நாகராஜ் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணம். இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த படுகொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் பாதிக்கப்பட்டுள்ள நாகராஜ் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அகில பாரத இந்து மகா சபை கேட்டுக் கொள்கிறது தவறும்பட்சத்தில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

Views: - 48

0

0