தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்..!
30 August 2020, 3:33 pmதமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை, தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரை, திருச்சி, சிவகங்கை, விருதுநகர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நாளை மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஏனைய உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடலோர மாவட்டங்களான புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ், குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஸியஸ் ஒட்டி பதிவாகக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அதேபோல் ஆகஸ்ட் இன்றும், நாளையும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்திலும், குஜராத் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இன்று முதல் செப்டம்பர் 3-ஆம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதன் காரணமாக மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.