திமுக ‘இந்த’ தோற்றத்தை உருவாக்குகிறது.. தமிழிசை கடும் சாடல்!

Author: Hariharasudhan
25 February 2025, 1:30 pm

பாஜக, தமிழுக்கு எதிராக செயல்படுவது போல் தோற்றம் உருவாக்கப்படுகிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

கோயம்புத்தூர்: கோவை விமான நிலையத்தில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாரதிய ஜனதா கட்சி 2026ஆம் ஆண்டு தேர்தலை நோக்கி வெற்றிகரமாகச் சென்று கொண்டிருக்கிறது. திமுக அரசு தமிழகத்தில் மொழி அரசியல் செய்து வருகிறது.

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல்வர், மருத்துவமும், கல்வியும் இரு கண்கள் என்கிறார். ஆனால் அவர் அரசு மருத்துவமனையில் ஊசி போட்டுக் கொள்வதில்லை. தனியார் மருத்துவமனைக்குத்தான் செல்கிறார்.

அமைச்சர்களின் மகன்கள் மற்றும் பேரன்கள் எங்கு படிக்கின்றனர் என அனைவருக்கும் தெரியும். திமுக அரசு மொழி விஷயத்தில் அப்பட்டமாக நடித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் இதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பாஜக அரசு எந்த விதத்திலும் இந்தியைத் திணிக்கவில்லை.

Tamilisai Soundararajan

பாஜக, தமிழுக்கு எதிராக செயல்படுவது போல் தோற்றம் உருவாக்கப்படுகிறது. தமிழ் மொழியின் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகளை பாஜக மேற்கொண்டுள்ளது. பாஜகவின் கொள்கையில் உண்மையாக பற்று கொண்ட தொண்டர்களும், தலைவர்களும் கட்சியிலிருந்து விலக முடியாது.

பாஜக உறுதித் தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. மக்கள் எங்களோடு இருக்கிறார்கள். அரசியலுக்காக குழந்தைகளைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதோடு, திறன் வளர்ப்பு, தொழில்நுட்ப அறிவு, விரிவுபடுத்தப்பட்ட கல்வி என அரசு மாணவர்களுக்குத் தேவையானவை இருக்கிறது.

இதையும் படிங்க: ’தமிழக மக்களை முட்டாளாக வளர்க்க வேண்டும் என..’ பாஜக ராம சீனிவாசன் பரபரப்பு பேச்சு!

தமிழக முதல்வரின் பேரன்கள் எங்கு படிக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ரயில் நிலையங்களில் இந்தி எழுத்தை அழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பிற மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் இதனால் பாதிக்கப்படுவார்கள். திமுக அரசு பகுதி நேர ஆசிரியர்களையும், பகுதிநேர மருத்துவர்களையும் நிரந்தரம் செய்வதாக கூறியது. ஆனால், செய்யாமல் இரட்டை வேடம் போட்டு வருகிறது.

ஸ்டாலின், மத்திய அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களான விஸ்வகர்மா திட்டம், நீட் ஆகியவற்றை தடுக்கிறார். பிரதமரின் மருந்தகத் திட்டத்தினை, மக்கள் மருந்தகம் என பெயர் மாற்றி அமல்படுத்தி உள்ளனர். மக்களை வஞ்சிக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது” என தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!