வீட்டிற்கு வெளியே நிறுத்தும் பைக்குளை குறி வைக்கும் புள்ளிங்கோ : 2 இளைஞர்கள் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
5 October 2021, 6:34 pm
Bike Theft Youths Arrest -Updatenews360
Quick Share

கோவை : காரமடை இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதாக வேலூரை சேர்ந்த உமாபதி,நவீன் உள்ளிட்ட இரு இளைஞர்கள் கைது.ரூ.1 லட்சம் மதிப்புள்ள டூவீலர் பறிமுதல்

நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்தவர் விஜய் ராஜேந்திரன் (வயது 35 ). இவரது உறவினர் வீடு காரமடை ஆசிரியர் காலனி காந்திநகர் பகுதியில் உள்ளது. இந்த நிலையில் விஜய் ராஜேந்திரன் தனது உறவினர் வீட்டிற்கு புதிதாக வாங்கிய யமஹா இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

பின்னர், தனது மாமா வீடு முன்பு நிறுத்தியுள்ளார். வீட்டிற்குள் சென்று விட்டு பின்னர்,சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது வாகனம் மாயமாகி உள்ளது.

இச்சம்பவம் குறித்து விஜய் ராஜேந்திரன் காரமடை காவல் நிலையத்தில் புகாரளித்ததன் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் காரமடை காவல் ஆய்வாளர் குமார்,உதவி ஆய்வாளர் முனுசாமி உள்ளிட்டோர் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து காரமடை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.விசாரணையில் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் வேலூர் துரைபாடியை சேர்ந்த உமாபதி (வயது 23), நவீன் (வயது 21) என்பதும் இவர்கள் இருவரும் தான் விஜய் ராஜேந்திரனின் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்றதும் தெரிய வந்தது.

மேலும் இதில் உமாபதி மீது வேலூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.பின்னர்,அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையிலடைத்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 463

0

0