கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு : என்னென்ன கட்டுப்பாடுகள்? கூடுதல் தகவல்கள்..

4 July 2021, 3:41 pm
Tomorrow Tasmac Open- Updatenews360
Quick Share

கோவை : கோவையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட உள்ளன. அரசின் வழிகாட்டுதல்களுடன் கொரோனா விதிகளை கடைபிடித்து கடைகள் திறக்கப்படும் என்று டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதில் பாதிப்பு அதிகம் இருந்த கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி உட்பட 11 மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்தது.

இந்த சூழலில், அனைத்து மாவட்டங்களுக்கும் நாளை முதல் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கோவை உட்பட 11 மாவட்டங்களிலும் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் இயங்க உள்ளன.

மது பான கூடங்கள் இயங்காது என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நாளை கோவையில் டாஸ்மாக் திறக்கப்படும் என்று மாவட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகத்தின் கோவை மாவட்ட மேலாளர் அப்துல் முனீர் Update News 360க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் கோவை வடக்கில் 158 கடைகள், தெற்கில் 135 கடைகள் என மொத்தம் 293 டாஸ்மாக் கடைகள் உள்ளன. நாளை கடைகள் திறப்பதை முன்னிட்டு கடைகளை கிருமி நாசினி தெளித்து திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், இரவு கடையை அடைப்பதற்கு முன்பும் கிருமி நாசினி தெளிக்க அறிவுறுத்தியுள்ளோம். விற்பனையாளர்கள் மாஸ்க் அணிந்து பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு திறக்கப்படும் கடை இரவு 8 மணி வரை செயல்படும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும்.

கடைகள் முன்பு மரக்கட்டைகள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக வெள்ளை நிற வண்ணப்பூச்சு கொண்டு கடை முன்பு வட்ட வடிவம் வரையப்படுகிறது. இவை அனைத்தையும் கண்காணிக்க 6 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் அனைத்து கடைகளிலும் ஆய்வுகளை மேற்கொள்வார்கள். கடை 12 மணி நேரம் திறந்திருக்கும் என்ற காரணத்தால் டோக்கன் வழங்கப்பட மாட்டாது. வழக்கம் போல் மதுபானங்களை வாங்கிக் கொள்ளலாம். அதே நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தால் டோக்கன் முறை அமல்படுத்தப்படும். அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் கடைகள் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கோவை மற்றும் அதன் அண்டை மாவட்டங்கள் அனைத்திலும் டாஸ்மாக் கடைகள் நீண்டகாலமாக அடைக்கப்பட்டிருந்தது. இதனால் சிலர் கேரளாவில் இருந்தும் கர்நாடகாவில் இருந்தும் மதுபாட்டில்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நிலையில், நாளை டாஸ்மாக் திறப்பது மது பிரியர்களை அலாதி இன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 202

0

0