பொங்கலை முன்னிட்டு கோவை கொடிசியாவில் தற்காலிக பேருந்து நிலையம் : எந்தெந்த வழித்தடங்களில் சிறப்பு பேருந்துகள் தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
11 January 2022, 8:24 pm
Cbe Spl Bus - Updatenews360
Quick Share

கோவை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை தொடர் அளிக்கப்பட்டு உள்ளது.

இதனால் கோவையில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உள்பட மற்ற மாவட்ட பொதுமக்கள் குடும்பத்துடன் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் பஸ்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுவதை தவிர்க்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: கோவை காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு, திருப்பூர், பல்லடம், கரூர், சத்தியமங்கலம் பகுதிக்கும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல் மார்க்கம் செல்லும் பஸ்களும், கொடிசியா திடலில் இருந்து சேலம், திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி, பழனி, உடுமலை, வால்பாறை, மதுரை, தேனி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இதன்படி கோவையில் இருந்து மதுரைக்கு 100 பேருந்துகள், சேலம் மற்றும் திருச்சிக்கு தலா 50 பஸ்கள், தேனிக்கு 40 பேருந்துகள் என 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதேபோல் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், கொடிசியா மைதானம் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் உக்கடம் பேருந்து நிலையங்களுக்கு போதுமான இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

கடந்த சில நாட்களாக கொடிசியா மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நாளை முதல் அங்கு பேருந்துகள் இயக்கப்படும்.
கொரோனா பரவலை முன்னிட்டு அரசின் வழிகாட்டுதலின்படி 75 சதவீத பயணிகள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் பேருந்துகள் பயணிகள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைக்கப்படுவார்கள். முககவசம் பயணிகள் அணியாத பேருந்துகளில் ஏற அனுமதி கிடையாது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Views: - 316

0

0