ரூ.50 கோடி கடன் பெற்று மோசடி… துணிந்து சண்டை செய்த விவசாயிகள்… டிராக்டர்களில் சென்று நிலத்தை உழுது பதிலடி..!!

Author: Babu Lakshmanan
22 September 2021, 6:03 pm
papanasam farmers 1- updatenews360
Quick Share

தஞ்சை : பாபநாசம் அருகே விவசாயிகளை ஏமாற்றி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டவரின் நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருமங்கலக்குடியில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலையில் பாபநாசம், சருக்கை, கருப்பூர், குடிகாடு, புத்தூர், மேட்டுத்தெரு, உம்பளாப்பாடி, கபிஸ்தலம், இளங்கார்குடி பகுதியில் உள்ள 2000ம் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து சர்க்கரை ஆலைக்கு வழங்கி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு முதல் கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்காமல் ஏமாற்றியதால், விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு முதல் கொள்முதல் நிறுத்தப்பட்டு, சர்க்கரை ஆலை மூடப்பட்டது. இந்நிலையில் சம்பள நிலுவைத் தொகையை வழங்கக் கோரி கடந்த நான்காண்டுகளாக கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் சர்க்கரை ஆலை நிர்வாகம் 213 விவசாயிகளை ஏமாற்றி கையெழுத்து வாங்கி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சுமார் 50 கோடி கடன் பெற்றுள்ளனர். இதேபோல் மூன்று வங்கிகளில் விவசாயிகள் பெயரில் பல கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், வங்கி நிர்வாகம் கடனை திருப்பி செலுத்துமாறு விவசாயிகளிடம் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் ஆலை நிர்வாகத்திற்கு சொந்தமான பாபநாசம் தாலுக்கா வடசறுக்கையில் உள்ள 100 ஏக்கர் நிலத்தை கையகப் படுத்தும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

அதன்படி, இன்று காலை வடசறுக்கை முகப்பில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்புத் தோகையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் 30 டிராக்டரில் ஊர்வலமாக வந்து ஆலை நிர்வாகத்திற்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை உழவு செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து அங்கு பாபநாசம் டிஎஸ்பி பூரணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீசாரிடம், ‘நாங்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை.. எங்களை இங்கேயே தீவைத்து கொளுத்துங்கள்,’ என ஆவேசமாக கூறினர்.

இதைத் தொடர்ந்து, தாசில்தார் மதுசூதனன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஆர்டிஓ தலைமையில், சர்க்கரை ஆலை நிர்வாகத்தினருடன் விசாரணை கூட்டம் நடத்தப்பட்டு, நிலுவைத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

கடன் நெருக்கடியால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு மத்தியில், இதுபோன்ற மோசடியாளர்களை எதிர்த்து துணிந்து சண்டை செய்ய வேண்டும் என்பதை பாபநாசம் விவசாயிகள் நிரூபித்து காட்டியுள்ளனர்.

Views: - 221

0

0