சீறிப் பாய்ந்த காளைகள்… அடக்க முயன்ற காளையர்கள்… சிலிர்ப்பூட்ட வைத்த திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டு..!!

Author: Babu Lakshmanan
29 ஜனவரி 2022, 3:05 மணி
Quick Share

தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு களத்தில் நின்று விளையாடிய காளைகள் பார்வையாளர்களை வியப்பூட்டியது.

தஞ்சையை மாவட்டம் திருக்கானூர்பட்டியில் உள்ள புனித அந்தோனியார் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

கீழே விழுந்தால் காயம் ஏற்படாமல் இருக்க வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை ஒரு அடி உயரத்திற்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டிருந்தன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. திருக்கானூர் பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி கண்காணிக்க ஜல்லிக்கட்டு கண்காணிப்பாளர் மிட்டல் கலந்து கொண்டார்.

ஜல்லிக்கட்டில் 700 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். முதலில் கோவில் காளைகள் வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதன் பின்னர் வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் பாய்ந்து சென்று அடக்க முயன்றனர். ஒரு சில காளைகளின் திமில்கள் வீரர்கள் பிடியில் சிக்கியது. ஆனால் பல காளைகள் திமிறி எழுந்து யாருடைய கைகளிலும் அகப்படாமல் சீறிப் பாய்ந்து சென்றன. களத்தில் நின்று விளையாடி வீரர்களை நெருங்கவிடாமல் பார்வையாளர்களுக்கு விருந்து படைத்தன. ஆக்ரோஷமாக ஓடி வந்த காளைகளை வீரர்கள் திமிலை பிடித்து அடக்கிய காட்சிகள் சிலிர்ப்பூட்ட வைத்தது.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கு தங்க காசு, பீரோ, நாற்காலி, சைக்கிள், கட்டில் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. இதே போல் அடக்கமுடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. போட்டியை காண தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாது சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் வந்திருந்தனர்.

பலர் போட்டி நடைபெறும் இடத்தின் அருகே இருந்த உயரமான கட்டிடங்கள் மீது ஏறி நின்றும், களத்தில் அமைக்கப்பட்ட இரும்பு தடுப்புகள் வெளிப்புறமாக நின்றபடியும் போட்டியை கண்டு களித்தனர். வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையும் சீறிப் பாய்ந்து வெளியே வரும் போதும், வீரர்கள் காளைகளை அடக்கிய போதும் ஆரவாரத்துடன் கோஷங்கள் எழுப்பி உற்சாகப்படுத்தினர். போட்டியானது 16 சுற்றுகளாக நடைபெறுகிறது. ஜல்லிகட்டு போட்டிக்கான பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

  • TVK Vijay விஜய் கட்சியில் இணையும் முன்னாள் ஐஏஎஸ்? புதிய சர்கார் அமைக்குமா தமிழக வெற்றிக் கழகம்?!
  • Views: - 2537

    0

    0