தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு மேலும் 2 நாள் சிபிசிஐடி காவல்!!

20 October 2020, 3:59 pm
CBCID - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : தட்டார்மடம் அருகே இளைஞர் செல்வன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பேச்சி, கருப்பசாமி ஆகிய 2 பேரையும் 2நாள்கள் சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றம் எண்-1 நடுவர் பாரதிதாசன் அனுமதி வழங்கியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த தனிஸ்லால் மகன் செல்வன் (வயது 32). வாட்டர் கேன் வியாபாரியான இவர், கடந்த 17ம்தேதி தட்டார்மடம் காட்டு பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவரை, அதிமுக பிரமுகர் திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன், சின்னதுரை, முத்துராமலிங்கம் ஆகியோர் காரில் கடத்தி கொலை செய்திருப்பதும், இதற்கு உடந்தையாக தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் செயல்பட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது நெல்லை மாவட்டம் திசையன்விளை போலீசார் வழக்குபதிவு செய்தனர். சின்னதுரை, முத்துராமலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் தட்டார்மடம், சொக்கன்குடியிருப்பு, திசையன்விளை பகுதிகளில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கிடையில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள், கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் திருமணவேல், முத்துகிருஷ்ணன், சின்னதுரை, முத்துராமலிங்கம் ஆகியோரை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான போலீசார், 6நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணையின் அடிப்படையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பேச்சி, கருப்பசாமி ஆகிய 2 பேரையும் சிபிசிஐடி போலீசார் கடந்த 8ந்தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் திருமண வேல், பேச்சி, கருப்பசாமி ஆகிய 3 பேரையும் சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை தொடர்ந்து திருமணவேல், பேச்சி, கருப்பசாமி ஆகிய 3 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண்-1ல் ஆஜர்படுத்தினர்.

இதில் பேச்சி, கருப்பசாமி ஆகிய 2 பேரை மட்டும். சிபிசிஐடி போலீசார் 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த குற்றவியல் நீதிமன்ற நடுவர் பாரதிதாசன் அனுமதி வழங்கினார். திருமண வேலை விசாரிக்க அனுமதி வழங்கவில்லை. ஏற்கனவே திருமண வேலை சிபிசிஐடி போலீசார் 6நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 20

0

0