2026 ஆம் ஆண்டு தேர்தல் திமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்… டாக்டர் கிருஷ்ணசாமி கணிப்பு..!!
Author: Udayachandran RadhaKrishnan14 August 2025, 4:59 pm
மதுரையில் தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழக கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது :தொடர்ந்து தமிழகத்தில் கௌரவக் கொலைகள் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. 1967 க்கு பிறகு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த திராவிட இயக்கங்கள் சுயமரியாதை கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் விதமாக தங்கப் பதக்கங்களை அறிவித்து செயல்படுத்தின.
இப்படிப்பட்ட தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக சாதி மாறி திருமணம் செய்ய கூடியவர்களை அவர்களது குடும்பத்தினரே கூலிப்படையினரின் துணையோடு கொலை செய்வது சர்வதேச அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படிப்பட்ட குற்றச்செயல்களை செய்யக்கூடியவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்கக்கூடிய வகையில் சட்டத்தை இயற்ற தமிழக அரசும் மத்திய அரசும் செயல்பட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கண்டன கூட்டங்களை எங்களது கட்சி சார்பாக நடத்த இருக்கிறோம். துவக்கமாக வருகிற 17 ஆம் தேதி காலை 11 மணிக்கு திருச்சியிலே எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒன்றிய அளவில் பேரணிகளையும் கண்டன பொதுக் கூட்டங்களையும் நடத்த இருக்கிறோம்.
காவல்துறையினரின் சுணக்கமான செயல்பாட்டின் காரணமாக தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் கூட பென்சில் பேனாவை எடுத்துச் செல்வது போல அரிவாள்களை தங்களுடன் எடுத்துச் செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டு இருக்கிறது.
சமீபத்தில் தூத்துக்குடியில் பாலிடெக்னிக்கில் படிக்கக்கூடிய மாணவர் தன்னோடு எடுத்துச் சென்ற வெடிகுண்டு வெடித்து சக மாணவர் ஒருவரின் கை துண்டிக்கப்பட்டு இருக்கிறது.
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவது, நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வது போன்ற சம்பிரதாயமான காரியங்களில் மட்டுமே காவல்துறை ஈடுபடுகிறதே தவிர, இந்த குற்றங்களை தடுத்து நிறுத்துவதில் சுணக்கமாக செயல்படுவதினாலேயே எங்கோ ஒரு இடைவெளி ஏற்பட்டு இருப்பது தெரிய வருகிறது.
காவல்துறையை கையாளுபவர்களுக்கும் உத்தரவிடுபவர்களுக்கும் இடையே ஒரு இடைவெளி இருப்பது தான் இது போன்ற குற்றச் செயல்கள் தமிழகத்தில் எண்ணற்ற வகையில் சமீப காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த போக்கை தடுத்து நிறுத்தா விட்டால் இப்போதைய தமிழக அரசுக்கு 2026 ஆம் ஆண்டு தேர்தல் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
மதுரை மாநகராட்சியில் வரி வசூலிப்பதிலும் வணிக வளாகங்களை ஏலம் விடுவதிலும் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று மேயரின் கணவரே கைது செய்யப்பட்டு இருக்கக்கூடிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இதுபோன்று ராமநாதபுரத்திலும் புதிய பேருந்து நிலையத்தில் வணிக வளாகங்களை ஏலம் விடுவதில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றிருக்கிறது. ஆளும் திமுக எம்எல்ஏ முத்துராமலிங்கம், அங்கு கட்டப்பட்டுள்ள 99 கடைகளில் 40க்கும் மேற்பட்ட கடைகளை தனது உறவினர்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் தோழமைக் கட்சிக்காரர்களுக்கும் ஒதுக்கீடு செய்திருக்கிறார்.

டெண்டர் விடப்பட்டு முதல் ஒரு வார காலத்திற்கு, நகராட்சி கமிஷனரே அவரது இருக்கையில் இல்லாமல் பார்த்துக் கொண்டு, வேண்டியவர்களிடம் மட்டும் டெண்டர் தொகை பெறப்பட்டு வேண்டியவர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது இதனை எதிர்த்து நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து இருக்கிறோம். நடவடிக்கை எடுக்க உள்ளாட்சித் துறை அமைச்சர் தவறினால் நீதிமன்றமும் செல்வோம். மக்கள் மன்றத்திலும் போராடுவோம்.
புதிய தமிழக கட்சியின் மாநில மாநாடு டிசம்பர் இறுதியில் மதுரையில் நடைபெற இருக்கிறது. அதற்காக கிராமப் புறங்களில் நான் சுற்றுப்பயணம் செய்து தேவேந்திர குல மக்களையும் பட்டியலின மக்களையும் சந்தித்து வருகிறேன்.
நேற்று சோழவந்தான் பகுதியிலும் இன்று வாடிப்பட்டி பகுதியிலும் சுற்றுப்பயணம் செய்கிறேன். அங்கு உள்ளாட்சி அமைப்புகள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன? என்கின்ற அளவிற்கு, சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்தும் எம்பி நிதியிலிருந்தும் எந்தப் பணிகளும் நடைபெற்று இருக்கிறதா என்ற அளவிற்கு, நிலைமை மோசமாக இருக்கிறது. சிறு மழைக்கே சேறு சகதியில் வாழக்கூடிய துர்ப்பாக்கிய நிலையில் கிராமத்து மக்கள் இருக்கின்றனர்.

மதுரை மாவட்ட கிராமப்புறங்களில் 40 வருடங்களுக்கு மேலாக வாழக்கூடிய மக்களுக்கு கூட பட்டா கொடுக்காத அரசாக இந்த மாவட்ட நிர்வாகம் இருக்கிறது. கேட்டால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பட்டாக்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.
விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய்க்கும் குறைவாகவே சம்பளம் கொடுக்கக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது.
சென்னையிலே தூய்மை பணியாளர்களை அரசு எந்திரத்தை கொண்டு, காவல்துறையினரை கொண்டு இந்த அரசு கைது செய்து இருப்பது நியாயம் அல்ல. அரசின் இந்த செயல் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தனிநபரின் முகத்திற்காக, தனிநபரின் செல்வாக்கை கொண்டு வாக்கு பெறும் தேர்தலாக இருக்காது. கடந்த நாலரை வருடங்களாக இந்த தமிழகத்தை ஆட்சி செய்த அரசின் செயல்பாடுகளை வைத்து தான் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிப்பார்கள்.
முதலாவதாக சட்ட ஒழுங்கை இந்த அரசு எப்படி கையாண்டது?இரண்டாவதாக வளர்ச்சித் திட்டங்களுக்காக என்ன இந்த அரசு செய்தது? மூன்றாவதாக ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்காக இந்த அரசு எப்படி நடந்து கொண்டது? நான்காவதாக தனித்த ஒரு கட்சியை ஆட்சியில் அமர்த்த மக்கள் இந்த தேர்தலில் விரும்ப மாட்டார்கள். ஆட்சியில் பகிர்வு என்ற நிலைதான் இந்த தேர்தலில் எதிரொலிக்கும்
